எழுத்தாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சி ஆதரவால் சர்ச்சை...
எழுத்தாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சி ஆதரவால் சர்ச்சை...
தி.மு.க ரூட்டில் த.வெ.க?
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு பெற்ற அணி அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கும் சூழலில், எதிர்த்து போட்டியிட்ட சேரன் அணி முக்கியப் பதவிகளைப் பிடித்திருப்பதால், சங்கம் சுமுகமாக இயங்குமா என்கிற சந்தேகம் உறுப்பினர்களிடையே எழுந்திருக்கிறது.
சங்கத்தின் தலைவராக இருந்த பாக்யராஜ், சமீபத்தில் மறைந்துவிட்டார். இந்த நிலையில் 2026 -29-ம் ஆண்டுகளுக்கான நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 19-ல் நடந்தது. இறப்பதற்கு முன்பு ஒரே அணியாகப் போட்டியிடலாம் என பாக்யராஜ் நினைத்ததாக, சில உறுப்பினர்கள் கூறினார்கள். ஆனால், தேர்தல் அறிவிப்பு வந்ததும் இரண்டு அணிகள் உருவாகின. சேரன் அணி, ‘நம்ம கே.பாக்யராஜ் அணி’ என்ற பெயரிலும் எஸ்.ஏ.சந்திரசேகர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரின் ஆதரவு பெற்ற அணி வி.சி.குகநாதன் தலைமையில் `திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி’ என்ற பெயரிலும் போட்டியிட்டன.
தேர்தல் தொடர்பாக இயக்குநர் ஆர்.பார்த்திபன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் சமூக ஊடகங்கள் வழியே சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதும் சலசலப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் தேர்தல் முடிவு வெளியாக, மொத்தமுள்ள 21 இடங்களில் எஸ்.ஏ.சி ஆதரவு பெற்ற அணி 11 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. அதேநேரம் 10 இடங்களையே பிடித்தாலும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கியப் பதவிகளை சேரன் அணி கைப்பற்றியிருக்கிறது.
பன்னிரண்டு செயற்குழு உறுப்பினர்களில், நான்கை மட்டுமே சேரன் அணி பெற்றிருக்கிறது. எந்தவொரு முடிவுக்கும் செயற்குழுவின் பெரும்பான்மை அவசியம் என்கிற சூழலில் இதுதான் இப்போது சிக்கலை உண்டாக்கியிருப்பதாகக் கூறுகின்றனர் உறுப்பினர்கள்.
சேரன் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் ஜெயப்பிரகாஷிடம் பேசினோம். ‘`பாக்யராஜ் சார் தலைமையில சங்கம் இயங்கியபோது கதைத் திருட்டு முதலான விஷயங்கள்ல தரமான முடிவுகளை எடுத்தார். ஆனாலும், நிர்வாகத்துல பல சிக்கல்கள் இருக்குங்கிறதை பொதுக்குழுவுலயே அவர் பேசியிருந்தார். அதோட, அவர் இருந்தபோதே ஒரே அணியா போட்டியிடுறது குறித்துப் பேசியதும் நிஜம்தான். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு அது சாத்தியப்படலை.
தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கு. மாற்றம் வேணும்னு முக்கியப் பதவிகளுக்கு ஒரு அணிக்கு ஓட்டுப்போட்ட உறுப்பினர்கள், செயற்குழுவுக்கு மட்டும் அந்த அணிக்கு ஓட்டுப்போடலைங்கிறதை எப்படி எடுத்துக்கிடறதுன்னு தெரியலை. இந்த நிலை நிர்வாகச் சிக்கலை உண்டாக்குமோன்னு தோணுது இல்லையா?
பாக்யராஜ் சார் இருந்தபோது இந்தச் சங்க விவகாரம் அவருக்குக் கொஞ்சம் மன உளைச்சலைத் தந்தது எல்லாருக்கும் தெரியும். அவர் மறைந்த பிறகும் சங்கத்துக்குத் திரும்பவும் அதே மாதிரியான ஒரு நிலை உருவாகிடுச்சோன்னுதான் நினைக்கத் தோணுது. ரெண்டு அணிகள்ல இருந்தும் வெற்றிபெற்றவர்கள் இணைந்து செயல்பட நினைத்தால் மட்டுமே சங்கம் சுமுகமா இயங்க முடியும்’’ என்கிறார் இவர்.
சங்க உறுப்பினரும், அ.தி.மு.க-வின் கலைப் பிரிவு செயலாளரும், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்தவருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனிடம் பேசினோம்.
‘`சங்கத்துல நிதி இல்லை. நிதி திரட்டணும், உறுப்பினர்களுக்கு பென்ஷன் தரணும்னு பல கோரிக்கைகள் கிடப்புல கிடக்கு. இப்ப தேர்தல் முடிஞ்சிடுச்சு. இனி, நான்தான் பெரியவன், நீதான் பெரியவன்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா சங்கத்துக்கு நல்லதில்லை.
மகன் முதல்வரா இருக்கிற சூழல்ல எஸ்.ஏ.சந்திரசேகர் ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவா செயல்பட்டா, அந்த இடத்துல அரசியல் நிச்சயம் வரும். அவர் ஒதுங்கி இருந்திருக்கலாம். இப்ப அவருடைய ஆதரவுபெற்ற அணி அதிக இடங்களில் ஜெயித்திருக்கிற சூழல்ல பொதுவான பார்வையில் அந்த அணியை த.வெ.க அணியான்னுதான் கேப்பாங்க. கடந்தகாலங்கள்ல அனைத்துச் சங்கங்களை யும் தி.மு.க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது மாதிரி இவங்களும் தொடங்கிட்டாங்க ன்னுதான் பேசுவாங்க.
இதைச் சரிசெய்யவேண்டியது அவருடைய பொறுப்புதான். தேர்வாகியிருக்கிற நிர்வாகிகள் எல்லார்கிட்டயும் பேசி ஒற்றுமையா செயல்பட வெக்கணும் அவர். எம்.ஜி.ஆர் சினிமாவுக்குச் செய்ய அவ்வளவு ஆசைப்படுவார். எடப்பாடி பழனிசாமியும் சினிமாவுக்குள் அரசியலை அனுமதிக்காமதான் இருந்தார். விஜய் முதல்வரானது முதல், தான் இருந்த இடமான சினிமாவுக்கு மகிழ்ச்சி தர்ற மாதிரி எந்த அறிவிப்பையும் தந்த மாதிரி தெரியலை. எஸ்.ஏ.சி முடிஞ்சா மகன்கிட்ட பேசி சினிமாவுக்கும், சினிமா எழுத்தாளர்களுக்கும் நாலு நல்ல விஷயத்தைச் செய்யலாம்’’ என்கிறார் இவர்.
பிளவுபட்ட தீர்ப்பு... பெருகும் அரசியல் பேச்சு... திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?