📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 04, 2026 05:01 PM

எழுத்தும் இசையும் எனது இரு கண்கள்: நெகிழும் தமிழ் காதலி செளந்தர நாயகி வயிரவன்!

எழுத்தும் இசையும் எனது இரு கண்கள்: நெகிழும் தமிழ் காதலி செளந்தர நாயகி வயிரவன்!

எழுத்தும் இசையும் எனது இரு கண்கள்: நெகிழும் தமிழ் காதலி செளந்தர நாயகி வயிரவன்!

ஒரு சிங்கப்பூரின் கலை உலகத்திலும் எழுத்துலகத்திலும் தனித்துவமிக்க தடம் பதித்து, தமிழின் வேர்களைத் தேடித் பயணிக்கிறார் சௌந்தர நாயகி வயிரவன்.

இங்கிருக்கும் தனது செட்டிநாடு பாரம்பரியத்தின் ஆணி வேரை சிங்கப்பூரின் மண்ணிலும் தனது வாழ்வியலில் கொண்டுவந்து பாராட்டுகளையும் குவித்து வருகிறார்.

உங்களைப் பற்றியும், மக்கள் உங்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் என்பது குறித்தும் கூறுங்களேன்…

என்னை மக்கள் யூடியூப் மற்றும் ரீல்ஸ் மூலமாக ஒரு பாடகியாக அதிகமாக அடையாளம் காண்கிறார்கள். ஆனால், நான் என்னை ஒரு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவுமே முதலில் அடையாளப்படுத்த விரும்புகிறேன். எழுத்தும் இசையும் எனது இரு கண்களாகும். ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக எனது பாடல்கள் மக்களிடம் சென்றடைந்தாலும், எழுத்துலகம்தான் எனது ஆழமான அடையாளம்.

உங்கள் சொந்த ஊர் மற்றும் கல்விப் பின்புலம் பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது சொந்த ஊர் காரைக்குடி, செட்டிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவள். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை வரலாறு (B.A) படிக்க 1990-ல் சென்னைக்கு வந்தேன். அங்கே மூன்று ஆண்டுகள் படித்துப்பட்டம்பெற்றேன். அந்தத் சமயத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த என் கணவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, படிப்பு முடிந்தவுடன் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். என் மாமனார் டாக்டர் எஸ். வைரவன் அவர்கள் அங்கு பல ஆண்டுகளாக மருத்துவராகப் பணிபுரிந்தவர்.

இதழியல் மற்றும் எழுத்துத்துறைக்குள் நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்? அந்தப் பயணம் எப்படி இருந்தது?

நான் பி.ஏ பட்டப்படிப்பை 1993-ல் முடித்தேன். ஆனால், டிப்ளமோ இன் ஃப்ரீலான்ஸ் ஜெர்னலிசம் (Diploma in Freelance Journalism) படிப்பை 1998-ல்தான் அப்ளை செய்து படித்தேன்; கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளி இருந்தது. ஆங்கில ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலோடுதான் கட்டுரைகளை எழுதி அனுப்பத் தொடங்கினேன்.

தொடர்ந்து ‘ஆன்லைன் வாய்ஸ்’ என்ற ஆன்லைன் இதழைத் தொடங்கினேன். அதில் மருத்துவர்களின் கட்டுரைகள், சமையல் குறிப்புகள் மற்றும் நகைச்சுவைகளைக் கட்டுரைகளாக வெளியிட்டேன். கலைஞர் கருணாநிதி அவர்களின் பேட்டி, திரு ப சிதம்பரம் அவர்களின் பேட்டி கண்டது எனது இதழியல் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொத்தம் இது வரை 9 நூல்களை வெளியிட்டுள்ளேன். இவற்றில் சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து சில புத்தகங்களை எழுதியுள்ளேன்.

இசைத்துறை மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? உங்கள் இசைப்பயணம் பற்றிச் சொல்லுங்களேன்…

சிறுவயதிலிருந்தே இசை மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. சிங்கப்பூரில் கலைப்பள்ளிகள் உள்ளன. அங்கு முறையாகச் சங்கீதம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நவராத்திரி விழாக்களில் பாடத் தொடங்கி, மேடைக் கச்சேரிகள் செய்தேன். திருக்குறள் மற்றும் நன்ெனறி தங்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இசை வட்டுகளை வெளியிட்டேன்.

அதன் பிறகு பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளேன். மேலும் ‘கலாமஞ்சரி’ என்ற பெயரில் இசைப் பள்ளியும் நடத்தி வருகிறோம். தமிழிசைச் சங்கத்தின் பாடத்திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை வழங்கும் அளவுக்கு எங்கள் இசைப்பள்ளி வளர்ந்துள்ளது.

மேலும், 2022-ல் பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், அவ்வையார் உருவங்களை ஐஸ்கிரீம் ஸ்டிக்குகளில் வரைந்து சிங்கப்பூர் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனையும் படைத்துள்ளோம்.

சிங்கப்பூரில் தமிழர்களின் நிலை மற்றும் உங்கள் பாரம்பரிய செட்டிநாடு வீடு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

சிங்கப்பூர் நாட்டில் தமிழ்மொழி மற்றும் தமிழர்கள் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர். அங்குள்ள தமிழர்களின் நிலைகுறித்து பல கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளேன். எங்கள் சிங்கப்பூர் வீடு ‘செட்டிநாடு விண்டேஜ்’ஸ்டைலில் பழங்காலப் பொருட்கள் மற்றும் பெரிய ஓவியங்களுடன் பாரம்பரிய முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டீரியர் டெக்கரேட்டர் நண்பரின் உதவியுடன் செட்டிநாட்டுப் பாரம்பரிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் அமைப்பும், அங்குள்ள பழங்காலப் பொருட்களும் பலரால் பாராட்டப்பட்டுள்ளன. அந்த வீட்டின் சிறப்பு களைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ளது.

உங்கள் படைப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

சிங்கப்பூரில் உள்ள ‘லிட்டில் இந்தியா’ (Little India) பகுதியைப் பற்றி கடந்த ஆண்டு ஒரு புத்தகம் எழுதினேன். அதனை சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜார்ஜ் யோ வெளியிட்டார். பின்பு கடந்த நவம்பர் மாதம் சென்னையில் அதை திரு. ப. சிதம்பரம் அவர்கள் வெளியிட்டார்கள். சிங்கப்பூரில் தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் தமிழர்களின் வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறேன். மேலும் பல புதிய ஆராய்ச்சி நூல்களை வெளியிடவும், இசைக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறேன்.

- ஷாலினி நியூட்டன்