📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 11, 2026 08:04 PM

FCRA சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றம்

FCRA சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றம்

FCRA சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றம்

வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

Published : August 11, 2026 at 7:29 PM IST

சென்னை: FCRA சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.

FCRA சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்ப பெற வேண்டுமென அரசினர் தனி தீர்மானத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

அப்போது பேசிய அவர், "வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் எனப்படும் Foreign Contribution Regulation Act (FCRA), 2010 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், வெளிநாட்டு ஆதாரங்களில் இருந்து நிதியைப் பெறுவதையும், அதனைப் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்தும் ஒன்றிய அரசின் சட்டமாக இது உள்ளது.

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நிதி, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பொது ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருப்பதை உறுதி செய்வதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதேவேளை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக சட்டப்பூர்வமான சர்வதேச உதவிகள் இந்தியாவுக்கு கிடைப்பதற்கும் இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசு FCRA சட்டத் திருத்த மசோதா 2026-ஐ தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக, மாநில முதலமைச்சரை பல்வேறு அமைப்புகளின் தலைவர்களை நேற்று சந்தித்தார். அப்போது, FCRA சட்டத் திருத்தத்தால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கும், பல்வேறு சமூக நல அமைப்புகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். மேலும், சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

FCRA திருத்த மசோதா 2026-ல், FCRA சட்டத்தின் கீழான பதிவு ரத்து செய்யப்படுதல், தன்னார்வமாக ஒப்படைக்கப்படுதல், பதிவு காலாவதியாகி புதுப்பிக்கப்படாமை அல்லது புதுப்பிப்பு மறுக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகளில், அந்த அமைப்புகளிடம் உள்ள வெளிநாட்டு பங்களிப்புகள் மற்றும் அவற்றின் மூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உருவாக்கப்பட்ட சொத்துகளை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் Designated Authority எனப்படும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அத்தகைய சொத்துகள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் முதலில் தற்காலிகமாகவும், பின்னர் நிரந்தரமாகவும் நியமிக்கப்பட்ட அதிகாரியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வகையில் இந்தத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக சட்டப்பூர்வமான நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டு, தற்போது மருத்துவமனைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்கள், வழிபாட்டுத் தலங்கள், சமூக நலக் கட்டமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற பொதுநலச் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் சொத்துகள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என அமைப்புகளின் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், ஒரு அமைப்பின் FCRA பதிவு புதுப்பிக்கப்படாதது அல்லது புதுப்பிப்பு மறுக்கப்பட்டதன் காரணமாக மட்டுமே, அந்த அமைப்பு நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் சொத்துகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு பங்களிப்புடன் உள்நாட்டு நிதியும் கலந்து உருவாக்கப்பட்ட சொத்துகள் முழுமையாக நியமிக்கப்பட்ட அதிகாரியின் கட்டுப்பாட்டுக்குள் செல்லக் கூடிய நிலை ஏற்படுவதால், சொத்துரிமை, நியாயமான நடைமுறை, விகிதாசாரக் கொள்கை மற்றும் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட சொத்துகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு கவலைகள் எழுவதாக அவர்கள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, சிறுபான்மை அமைப்புகள் உள்ளிட்ட சமூக நல அமைப்புகளுக்கு இந்தத் திருத்தம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், FCRA சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

வெளிநாட்டு நிதி முறையாகப் பெறப்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு, வெளிப்படையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறது. அதேவேளை, இத்தகைய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவம், சட்டத்தின் ஆட்சி, இயற்கை நீதி, நியாயமான நடைமுறை மற்றும் சட்டபூர்வமான சொத்துரிமை ஆகிய அரசியலமைப்புச் சார்ந்த அடிப்படை கொள்கைகளின் வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.

உள்நாட்டு நிதியால் உருவாக்கப்பட்ட சொத்துகள், குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்ட சொத்துகள், நியாயமான காரணமின்றி அல்லது அளவுக்கு மீறிய அரசுடைமையாக்க நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான தெளிவான சட்டப் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்த மன்றம் வலியுறுத்துகிறது.

எந்தவொரு வெளிநாட்டு பங்களிப்பைப் பெறும் நிறுவனத்தின் சொத்தும் நிரந்தரமாக அரசிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, அந்த நிறுவனத்திற்கு போதுமான முன் அறிவிப்பு, விளக்கம் அளிக்கும் வாய்ப்பு, காரணங்களுடன் கூடிய உத்தரவு மற்றும் சுயாதீனமான, பயனுள்ள மேல்முறையீட்டு உரிமை ஆகியவை சட்டத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இந்த மன்றம் வலியுறுத்துகிறது.

ஒரு நிறுவனத்தின் FCRA பதிவு புதுப்பிக்கப்படாதது அல்லது அதன் புதுப்பிப்பு தாமதமானது என்ற காரணத்தால் மட்டும், அந்த நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தியதாகக் கருதக் கூடாது. அதற்கான எந்தவிதமான சட்டவிரோத செயல்பாட்டிற்கும் ஆதாரம் இல்லாத நிலையில், அந்த நிறுவனம் சட்டபூர்வமாகப் பெற்ற அல்லது உருவாக்கிய சொத்துகளை தானாகவோ அல்லது அளவுக்கு மீறிய வகையிலோ அரசுடைமையாக்கக் கூடாது.

FCRA தொடர்பான எந்தவொரு புதிய சட்டக் கட்டமைப்பும், இயற்கை நீதி, நியாயமான நடைமுறை, சட்டபூர்வமான சொத்துரிமைகள், உரிய சட்டப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை முழுமையாக மதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று இந்த மன்றம் வலியுறுத்துகிறது.

ஒன்றிய அரசின் நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும், வெளிநாட்டு பங்களிப்புகளின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

அதே நேரத்தில், இத்தகைய நோக்கங்களை அரசியலமைப்பு வழங்கியுள்ள சட்டப் பாதுகாப்புகள், கூட்டாட்சித் தத்துவம், நிறுவனங்களின் தன்னாட்சி, சட்டபூர்வமான சொத்துரிமைகள் மற்றும் அந்த நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாடு ஆகியவை பாதிக்கப்படாத வகையில் அடைய முடியும் என்று தமிழ்நாடு அரசு நம்புகிறது.

எனவே, மேலே குறிப்பிடப்பட்ட ஆட்சேபனைகளின் அடிப்படையில், வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் நிறுவனங்களுடன் தொடர்புடைய சொத்துகளை அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருதல், நிர்வகித்தல் மற்றும் அரசுடைமையாக்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய இந்த மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்த மன்றத்தின் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2026-ஐ தற்போதைய வடிவில் நிறைவேற்றுவதன் மூலம், எஃப்.சி.ஆர்.ஏ. பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிக்க மறுக்கப்படுதல், பதிவு ரத்து செய்யப்படுதல் அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற காரணங்களால் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் ஒப்படைத்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மாமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

இத்தகைய விதிகள், தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி மற்றும் சமூக நல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும். எனவே, வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெற்று, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு ஒன்றிய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது.

எந்தவொரு சட்டத் திருத்தமும் இயற்கை நீதி, விகிதாச்சாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்த வேண்டும். மேலும், வெளிநாட்டு பங்களிப்புகளை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாச்சார மற்றும் சமூக நல அமைப்புகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

எனவே, வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்றார். இதனையடுத்து விவாதத்திற்குப் பிறகு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.