FCRA திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்
FCRA திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் - பி. வில்சன் வலியுறுத்தல்
FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை ஒரு நேர்மறையான நடவடிக்கையாக கருதுவதாக பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
Published : August 13, 2026 at 10:04 AM IST
சென்னை: வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டுமென சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த (FCRA amendment) மசோதாவுக்கு எதிராக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் இந்த மசோதாவை விரிவான ஆய்விற்காக கூட்டு நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்ப மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க மாநிலங்கவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞமான பி. வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “FCRA திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பதை ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக கருதலாம். இந்த பரிந்துரையின் மூலம், மசோதாவை நாடாளுமன்றத்தில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், அனைத்து தரப்பினரிடமும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை பரிசீலிப்பதற்குமான முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்ட திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க ஏதுவாக மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டு நடவடிக்கை குழு நடத்திய தேசிய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆலோசனைகளை தெரிவித்தனர்.
ஜூலை 20ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது முக்கிய கோரிக்கையில் கூட்டு நடவடிக்கை மன்றம் உறுதியாக உள்ளது. அதனால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை ஒரு நேர்மறையான நடவடிக்கையாக கருதுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த கடினமான சூழ்நிலையில் தங்களுடன் நின்ற ஒவ்வொரு தலைவருக்கும், அரசியல் கட்சிகளுக்கும், நிறுவனங்களுக்கும், தனிநபருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்தவாக மாநிலங்களவை உறுப்பினரும், கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவருமான பி. வில்சன் தெரிவித்துள்ளார்.