📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 06, 2026 12:32 PM

GD Naidu Review: ஜிடி நாயுடு விமர்சனம்.. மறக்கப்பட்ட மேதையை மக்கள் மனங்களில் நிறுத்தினாரா மாதவன்?

GD Naidu Review: ஜிடி நாயுடு விமர்சனம்.. மறக்கப்பட்ட மேதையை மக்கள் மனங்களில் நிறுத்தினாரா மாதவன்?

சென்னை: ராக்கெட்ரி படத்தில் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனை தேச துரோகியாக ஒதுக்கிய தேசத்துக்கு எதிராக கேள்வி எழுப்பி அவர் யார்? அவரது சாதனை என்ன? என்பதை புரிய வைக்க மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்து நம்பி நாராயணனாக திரையில் வாழ்ந்து அன்சங் ஹீரோவை அறிமுகப்படுத்தியதை போலவே ஜி.டி. நாயுடு யார்? அவரது சாதனைகள் என்ன? அவரை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்கிற விவாதத்தையே இந்த படத்தின் மூலம் செய்துக் காட்டியுள்ளார் மாதவன்.

வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் உடன் இணைந்து மாதவனும் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும், திரைக்கதை உள்ளிட்ட பல இடங்களில் தனது திறமையை நிருவிய மாதவன் ஜிடி நாயுடுவாகவும் வாழ்ந்துக் காட்டி மீண்டும் ஒரு அன்சங் ஹீரோவை மக்களுக்கு அறிமுகப்படுத்த எந்தளவுக்கு முயற்சி செய்ய முடியுமோ அந்தளவுக்கு முயற்சி செய்துள்ளார்.

கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், துஷாரா விஜயன், பிரியாமணி, சத்யராஜ், ஜெயராம், வினய், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? பாஸா? ஃபெயிலா? என ஒட்டுமொத்த விமர்சனத்தையும் இங்கே பார்க்கலாம் வாங்க..

ஜிடி நாயுடு கதை: தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாறு பற்றிய பாடத்தை சேர்க்கலாமா? வேண்டாம? என்கிற விவாதத்தில் அவரது கதை தொடங்குகிறது. 1910ம் ஆண்டு ஹென்ரி ஆடம்ஸின் (காரல் ஆண்ட்ரூ ஹார்ட்டே) மோட்டார் சைக்கிளை பல ஆண்டுகளாக முயற்சி செய்து விலைக்கு வாங்குகிறார். அந்த வாகனத்தை வாங்கிய அவர் அதை ஓட்டி பந்தா காட்டாமல் அதை பிரித்துப் பார்த்து அது எப்படி வேலை செய்கிறது என்றும் அதை போலவே மோட்டார் வாகனங்களை எப்படி உருவாக்கலாம் என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடும் இடத்தில் படம் ஆரம்பிக்கிறது.

தொழிலதிபராகவும் விஞ்ஞானியாகவும் கோவையில் கொடிகட்டிப் பறக்கிறார். யுஎம்எஸ் எனும் பஸ் கம்பெனியை நடத்தும் அளவுக்கு உயர்கிறார். ஆனால், இவரது வளர்ச்சி ஆங்கிலேயர்களுக்கு எரிச்சலை கொடுக்க வரி விதிப்பு மூலம் பஞ்சாயத்து வெடிக்கிறது.

தனது வாழ்க்கையில் தைரியமாகவும் நேரம் தவறாமலும் துணிச்சலுடன் அறிவை பயன்படுத்தி உழைத்து உருவாக்கிய சாம்ராஜ்யத்தையே கண் முன் பறிகொடுத்து நிற்க நேரிட அவர் என்ன செய்தார்? அவருக்கு என்ன நேர்ந்தது? இந்தியாவின் எடிசன் என போற்றப்பட்ட மாமேதையை பாடப் புத்தகத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என விவாதம் நடத்தும் அளவுக்கு என்ன சிக்கல்? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் விடையாக இந்த படம் அமைந்துள்ளது.

படம் எப்படி இருக்கு?: மாதவன் அசால்ட்டாக கமர்ஷியல் படங்களை எடுத்து கல்லா கட்டிக் கொண்டு ஜாலியாக இருக்கலாம். ஆனால், அதை தாண்டி அன்சங் ஹீரோக்களை அதிகளவிலான மக்கள் அறிய வேண்டும் என்கிற முயற்சியில் இதுபோன்ற கதைகளை தேர்வு செய்து அதற்கு முதலீடு போட்டு நடித்து வருவதே பாராட்டுக்குரியது.

ஜிடி நாயுடுவின் 25 வயதில் இருந்து 75 வயது வரையிலான தோற்றத்துக்காக அவர் போட்ட உழைப்பும் மெனக்கெடலும் ஃபிரேமிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மாதவனுக்கு பக்க பலமாக இருக்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் குறைவான இடங்களில் வந்தாலும் செம ஸ்கோர் செய்கிறார்.

முதல் மனைவியாக நடித்த பிரியாமணி, 2வது மனைவியாக நடித்த துஷாரா விஜயன் எல்லாம் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர். வரி வசூல் செய்யும் அதிகாரியாக வரும் ஜெயராம், நெகட்டிவ் ரோலில் மிரட்டும் வினய், தம்பி ராமையா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

பிளஸ்: 1900 காலக்கட்டத்தை மீண்டும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதில் புரொடக்‌ஷன் டிசைனர் சிரில் குருவிலா மற்றும் அந்த காலக்கட்டத்தை படம் பிடித்து தனது கேமரா மூலம் நம்மை டைம் டிராவல் செய்ய வைத்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர். கோவிந்த் வசந்தா இசை கூடுதல் பலத்தைக் கொடுக்க ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் மாதவன் தூக்கி சுமந்து படத்துக்கு பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளார். ஹிட்லரை சந்திக்கும் காட்சி எல்லாம் படமாக்கப்பட்ட விதம் அருமை.

மைனஸ்: ஒரு மிகப்பெரிய அறிவியல் மேதை மற்றும் தொழிலதிபரின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையின் நிறைகளை மட்டும் காட்டி அவர் ஒரு சூப்பர் ஹீரோ போல பில்டப் கொடுக்காமல் அவரிடம் இருந்த குறைகளையும் சுட்டிக்காட்டிய விதத்தில் இயக்குநர் ஸ்கோர் செய்தாலும், அந்தக் காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை சற்றே குறைத்து விடுகின்றன. மேலும், ஜிடி நாயுடுவின் வாழ்க்கை பயோபிக்கை 2 மணி நேரம் 27 நிமிடத்துக்குள் சுருக்கி காட்டிய நிலையில், பல முக்கியமான காட்சிகள் ஆழம் இல்லாமல் ஜம்ப் கட் சீன்களாக கடந்து விடுவது மைனஸ் ஆக தெரிகிறது. எப்படி இருந்தாலும், ஜிடி நாயுடு யார்? அவரை பற்றி ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிய அவரைப் பற்றிய புத்தகங்களை விட இந்த ஒரு படத்தை தியேட்டரில் பார்த்தாலே போதும் அடுத்த தலைமுறையினர் அவரை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.