GDN Day 3 Box Office
சென்னை: கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜிடிஎன் திரைப்படத்தில் ஜிடி நாயுடுவாக நடித்திருக்கிறார் மாதவன். இதில் அவருடன் துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்க கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்ற சூழலில்; மூன்றாவது நாளில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விளங்கும் மாதவன்; பயோபிக்கில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். ராக்கெட்ரி, துரந்தர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது ஜிடிஎன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தியாவின் எடிசன் என புகழப்பட்ட ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறுதான் படம். இதில் ஜிடி நாயுடுவாக நடித்திருக்கிறார் மேடி. அவருடன் துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு படம் ரிலீஸானது.
எப்படி இருக்கிறது படம்?: இந்தப் படம் ரசிகர்களிடம் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஜிடி நாயுடுவின் வழ்க்கையில் நடந்த பல விஷயங்களை இந்தத் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக படத்தை உருவாக்கியிருந்தார்கள் படக்குழுவினர். பெண்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளை தியேட்டர்களுக்கு அழைத்து வந்து படம் பார்க்க வைக்கிறார்கள். இதன் காரணமாக தியேட்டர்களில் சொல்லிக்கொள்ளும்படியான கூட்டம் கூடுவதும் குறிப்பிடத்தக்கது.
என்ன ஸ்பெஷல்?: பயோபிக் என்றால் கொஞ்சம் டல் மொமண்ட்ஸும் படத்தில் இருக்கும் என்ற நினைப்பை இப்படம் அடித்து நொறுக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சோடை போகாத திரைக்கதை, இயக்குநரின் நேர்த்தியான உருவாக்கம் எல்லாம் சேர்ந்து இப்படத்தை ரசிகர்களிடையே டாப்பில் கொண்டு சென்றிருக்கிறது. குறிப்பாக, இத்தனை வருடங்கள் ஜிடி நாயுடுவை ஒரு விஞ்ஞானி என்று மட்டும்தான் நினைத்திருந்தோம்; ஆனால் இதை பார்த்த பிறகுதான் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கு பின் அவர் சந்தித்த வலிகள், துரோகங்கள் உள்ளிட்டவைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இனிமேல் அவரது மதிப்பு மேற்கொண்டு உயரும் என்பது ரசிகர்களின் கருத்து.
மாதவன் வேற லெவல்: இப்படத்தின் தூண்களில் ஒன்றாக விளங்கியவர் மாதவன். ராக்கெட்ரியில் நம்பியாகவும், துரந்தரில் அஜித் தோவலாகவும் மிரட்டிய மாதவன் இதில் ஜிடி நாயுடுவாக பக்காவாக பொருந்தி போயிருக்கிறார். தன்னுடைய நடிப்பு, உடல்மொழி என அத்தனையிலும் ஜிடியை கொண்டு வந்து அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கிறார். இதற்காக அவருக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்நிலையில் அந்தப் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜிடிஎன் மூன்றாவது நாள் வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, ஜிடிஎன் தமிழ் வெர்ஷன் முதல் நாளில் 46 லட்சம் ரூபாயும், இரண்டாவது நாளில் 84 லட்சமும் வசூலித்திருந்தது. மூன்றாவது நாளான நேற்று மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். தெலுங்கு வெர்ஷனை பொறுத்தவரை நேற்று பத்து லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். ஆகமொத்தம் மூன்று நாட்களில் அப்படம், இரண்டு கோடியே 69 லட்சம் ரூபாயை வசூலித்து கெத்து காண்பிக்கிறதாம். முதல் நாளில் மட்டும் டல்லாக இருந்த வசூல்; அடுத்தடுத்த நாட்களில் பிக்கப்பாகிவிட்டது. நாளுக்கு நாள் வசூல் உயர்வதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.