ஹாக்கி உலககோப்பை 2026: இந்தியா பாகிஸ்தான். போட்டி எப்போது.. அட்டவணை விவரம்? எந்த சேனல், ஒடிடி?
ஹாக்கி உலககோப்பை 2026: இந்தியா பாகிஸ்தான். போட்டி எப்போது.. அட்டவணை விவரம்? எந்த சேனல், ஒடிடி?
மும்பை: இந்திய ஆடவர் ஹாக்கி அணி, உலகக் கோப்பையை வென்றோ அல்லது பதக்க மேடையில் ஏறியோ 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் அந்த நீண்டகால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்த தலைமைப் பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன், உலகெங்கிலும் உள்ள 16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்திய அணி இறுதிவரை முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆண்கள் உலகக் கோப்பை போட்டியானது, பெண்கள் உலகக் கோப்பையுடன் உலகளவில் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. பெல்ஜியத்தின் வாவ்ரேவில் உள்ள பெல்பியஸ் ஹாக்கி அரங்கம் மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் உள்ள வேகனர் அரங்கம் ஆகிய இரு மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
ராஜ்கிரில் நடைபெற்ற 2025 ஆசியக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. எஃப்ஐஎச் (FIH) ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி வேல்ஸ், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுடன் 'டி' பிரிவில் (Pool D) இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும், இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
'ஏ' பிரிவில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் மலேசியா அணிகள் மோதவுள்ளன. 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா களமிறங்கும் போட்டியின் அட்டவணை இதோ.
ஆகஸ்ட் 15: இந்தியா vs வேல்ஸ், மாலை 4:30 மணி, வேகனர் ஹாக்கி மைதானம்.
ஆகஸ்ட் 17: இந்தியா vs இங்கிலாந்து, மாலை 6:30 மணி, வேகனர் ஹாக்கி மைதானம்.
ஆகஸ்ட் 19: இந்தியா vs பாகிஸ்தான், மாலை 6:30 மணி, வேகனர் ஹாக்கி மைதானம்.
இந்தியாவில், இந்த உலகக் கோப்பை போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். முந்தைய தொடர்களைப் போலன்றி, இந்த உலகக் கோப்பையில் கிராஸ்ஓவர் போட்டிகளோ அல்லது கால் இறுதிப் போட்டிகளோ இருக்காது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். அங்கு அவை தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
'டி' பிரிவில் இருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள், 'ஏ' பிரிவின் முதல் இரண்டு அணிகளுடன் மோதும்; அதே நேரத்தில் 'பி' பிரிவின் முதல் இரண்டு அணிகள், 'சி' பிரிவின் முதல் இரண்டு அணிகளுடன் மோதும்.இரண்டாவது சுற்றில், ஒரு அணி தனது சொந்த பிரிவில் இருந்து தகுதி பெற்ற மற்ற அணியுடன் விளையாடிய போட்டியின் புள்ளிகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டு, மற்றொரு பிரிவின் இரு அணிகளுடன் மோதும்.
இரண்டாவது சுற்றுப் பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.அதே சமயம் முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளின் பிரிவுகளில் கடைசி இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தரவரிசைக்கான போட்டிகளில் விளையாடும்.
உலககோப்பைக்காக இந்திய ஹாக்கி அணி விவரம்: கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா.
டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யாஷ்தீப் சிவாச்.
மிட்பீல்டர்கள்: ராஜீந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லாலகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்.
ஃபார்வேர்டுகள்: தில்பிரீத் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், மன்தீப் சிங், அபிஷேக்.