ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் எல்லை! ஈரான் எச்சரிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில்
ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் எல்லை! ஈரான் எச்சரிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில்
ஈரான் நாட்டின் மீது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான நிதி மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதை சுற்றியுள்ள நிலப்பரப்புகள் அனைத்தும் தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமாகவே நான் பார்க்கிறேன்" என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த சர்ச்சை பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த பகிரங்க எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரானின் ஆயுதப்படை தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி, "தரை, கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் சைபர் என அனைத்துத் துறைகளிலும் ஈரான் முழு உறுதியோடு தயாராக உள்ளது" எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் தனது முப்படை வலிமையைக் கொண்டு எதிரிக்கு கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடியைக் கொடுக்கும் என ஈரானிய அரசு ஊடகங்கள் வாயிலாக அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் திங்கள்கிழமை புதிய தடைகள் குறித்த முழு விவரங்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஈரானின் மத குருமார்களின் ஆட்சியை வீழ்த்தும் நோக்கில், அந்நாட்டிற்குப் பொருளாதார ரீதியாக உதவும் பிற நாடுகளின் மீதும் வர்த்தகத் தடைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈரானிடம் இருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யும் சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரிய வர்த்தக அழுத்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முற்றியுள்ள இந்த போர்ப் பதற்றம் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் கட்டுக்கடங்காமல் உயரத் தொடங்கியுள்ளன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 94.39 டாலராகவும், அமெரிக்க டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் 87.06 டாலராகவும் உயர்ந்துள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் தொடர் தடைகள் மற்றும் போர்ச் சூழல் காரணமாக ஈரானின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் ஒப்புக்கொண்டுள்ளார்.
"நமது ராணுவ பலம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து மக்கள் பசியால் வாடினால் நாம்மால் பிழைக்க முடியாது" எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
ஆயினும், அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியாமல் தங்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் படைகள் மூலம் எதிரிகளை எதிர்கொள்ள ஈரான் தீவிரமாகத் தயாராகி வருகிறது.