📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 22, 2026 08:04 PM

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் தயாரித்து வழங்க 2 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.

இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ.0.01 என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது. மற்ற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரியதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்துள்ளது.

இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளதால், ஜூன் மாதத்திலிருந்து 4 மாதங்களுக்கு தேவையான 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மேலே குறிப்பிட்ட குறைந்த விலைப்புள்ளி அளித்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.