ஹோர்முஸ் நீரிணை விவகாரம்
ஹோர்முஸ் நீரிணை விவகாரம் - அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு சிக்கல்!
கல்லாதது உலகளவு: பெட்ரோல் விலை கேலன் ஒன்றுக்கு $4.50 என்ற நிலையில் நவம்பர் இடைத்தேர்தலை எப்படிச் சந்திப்பது என்று ட்ரம்ப்பின் குடியரசு கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் அஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.
‘வணிகக் கப்பல்களுக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்கும். அதே நேரம், ஓமானுடன் இணைந்து அந்த நீரிணையைத் தொடர்ந்து ஈரான் கட்டுப்படுத்தும். அத்துடன், போருக்கு முந்தைய நிலைக்குக் கப்பல் போக்குவரத்துத் திரும்பும். ஈரான் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக்கொள்ளும்’ என்று வரைவு உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்கும் இடையே பாகிஸ்தான் உதவியுடன் நடந்துவந்த பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையை எட்டிய நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்க ட்ரம்ப் தயாராகிக் கொண்டிருந்தார். அப்படியான சூழலில், தற்போதைய இடத்திற்கு அமெரிக்காவையும், ஈரானையும் கொண்டுவர பாகிஸ்தான் எடுத்த முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.
பாகிஸ்தானின் முப்படைத் தளபதி ஆசிம் முனீர் ஏப்ரல் 15-ம் தேதி, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு பயணம் செய்து மூன்று நாள்கள் அங்குத் தங்கினார். அப்போது, ஈரான் தலைவர்களுடன் அவர் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மீண்டும், மே 22-ம் தேதி டெஹ்ரானுக்குச் சென்றிருந்த முனீர், பெரும் பின்னடைவிலிருந்த பேச்சுவார்த்தையை மீட்டெடுத்தார்.
ஈரானிய எண்ணெய்யைப் பெருமளவு வாங்குபவர்கள் சீனர்கள். ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டதால், சீனாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. சீனா மட்டுமின்றி, அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையால் பல நாடுகளும் பாதிக்கப்பட்டன. ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்பட்டால், உலகின் 25 சதவிகித எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி தீரும். பின்னர், சில மாதங்களில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இதில் முழுமையான ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையும் நீடிக்கிறது.
‘நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர, வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் இருக்காது’ என்று 11 வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் அறிவித்தார். அதன் மூலம், ட்ரம்ப் தன்னை ஒரு மூலையில் அடைத்துக்கொண்டார். ஆனால், அவரது இந்த மிகையான நிலைப்பாட்டுக்கு அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்புதான், அவரை நிதான நிலைக்குக் கொண்டுவந்தது.
‘நான் ஈரானுடன் ஒப்பந்தம் செய்தால், 2015-ல் ஒபாமா செய்ததைப் போன்ற ஒப்பந்தமாக அது இருக்காது. மாறாக, அது ஒரு நல்ல, முறையான ஒப்பந்தமாக இருக்கும்’ என்று மே 24-ம் தேதி ட்ரம்ப் அறிவித்தார். ஈரானுக்கு அதிக அளவு பணத்தை ஒபாமா கொடுத்தார் என்றும், ஓர் அணு ஆயுதத்திற்கான தெளிவான, திறந்த பாதையை அவர் அமைத்துக் கொடுத்தார் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரானுடன் ஓர் உடன்பாடு பெருமளவு பேசிமுடிக்கப்பட்டுவிட்டது என்று மே 24-ம் தேதி ட்ரம்ப் தெரிவித்த கருத்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஒப்பந்தம் எட்டப்பட்டு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கும் என்று பலரும் எண்ணினர். ஆனால், பெரும்பகுதி ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது என்று முதலில் நம்பிக்கை தந்த ட்ரம்ப், 'காலம் நமக்குச் சாதகமாக இருப்பதால், அவசரப்பட்டு ஓர் ஒப்பந்தத்தில் இறங்க வேண்டாம் என்று என் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளேன்' என்று பின்னர் தனது சுருதியைக் குறைத்தார்.
ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்த அடுத்த நாள் [மே 25], தெற்கு ஈரானிலுள்ள ஏவுகணை ஏவுதளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்கியது. ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்க முயன்றதாக இரண்டு ஈரானிய அதிவேகப் படகுகளை அமெரிக்கா மூழ்கடித்தது. இந்த தாக்குதல்களைத் தற்காப்பு நடவடிக்கை என்று அமெரிக்க ராணுவம் கூறியது. இரண்டு நாள்களுக்குப் பின்னர் ஈரானின் பந்தர் அப்பாஸையும் அமெரிக்கா தாக்கியது. அதற்குப் பதிலடியாக குவைத்திலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கியது.
இதற்கிடையில், ‘ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதாக எந்தவொரு ஒப்பந்தமும் இருக்க வேண்டும்’ என்று மே 27-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ வலியுறுத்தினார். நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரானும், ஓமானும் பகிர்ந்துகொள்ளும் என்ற யோசனையை நிராகரித்த ட்ரம்ப், இந்த நீர்வழி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்றார்.
ஈரானைப் பொறுத்தளவில், இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், "யாரும் இதைக் கட்டுப்படுத்தப் போவதில்லை" என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். நீரிணை நிர்வாகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமெரிக்காவின் நட்பு நாடான ஓமானை ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார்.
"ஓமான் எல்லோரையும் போல நடந்து கொள்ளும். இல்லையெனில், நாம் அவர்களை வெடிகுண்டால் தகர்க்க வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப். அமெரிக்காவிடமிருந்து இப்படி எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் ஓமானிகள் ஈரானோடு இத்தகைய பேச்சுகளில் ஏன் ஈடுபட்டார்கள் என்பது புரியவில்லை.
ஈரானை “மண்டியிடச் செய்ய” எதிரி முயல்வதாக மே 28-ம் தேதி ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி குற்றம் சாட்டினார். அதற்குப் பின் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், "ஒரு சில சொற்பதங்கள் குறித்து முன்னும் பின்னுமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் விவாதித்து வருகிறார்கள்" என்றார். இதில், யுரேனியம் செறிவூட்டல் குறித்த கேள்வியும் அடங்கும்.
ஈரான் ஒரு நெருப்புப் புகைக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக மே 28-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஈரானின் கையறு நிலையை ட்ரம்ப் விவரித்தார். புதிய அணு எரிபொருளின் செறிவூட்டலை இடைநிறுத்துவதற்கு ஈரானியர்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
ஆனால், 20 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம் செய்வதற்கு, ஈரானின் தலைவர்கள் முன்வரவில்லை என்று ட்ரம்ப் ஒன்பது நாள்களுக்கு முன்பு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நிருபர்களிடம் கூறினார். இந்த பிரச்னையில் ஈரானியர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தங்கள் ஏவுகணைகளின் அளவு, வரம்பு பற்றிக் கூட விவாதிக்க ஈரானியர்கள் மறுத்துவிட்டனர். அதை அமெரிக்கா வலியுறுத்தும் என்று முன்பு கூறியிருந்தது. இது இஸ்ரேலியர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்னையாகும். அவர்கள் ஈரானின் பல எறிவிசை ஏவுகணைகளுக்கு எட்டும் தூரத்தில் உள்ளனர்.
பெட்ரோல் விலை கேலன் ஒன்றுக்கு $4.50 என்ற நிலையில் நவம்பர் இடைத்தேர்தலை எப்படிச் சந்திப்பது என்று ட்ரம்ப்பின் குடியரசு கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீரிணை திறப்பும் அதையொட்டிய எண்ணெய் விலை குறைப்பும் நடப்பது முக்கியம். அது போலவே, ஈரானியர்களைப் பொறுத்தவரை, அமெரிக்க, மேற்குலக பொருளாதாரத் தடைகளால் சிதிலமடைந்துள்ள அவர்களின் பொருளாதாரம் மீண்டும் எழுந்து நிற்பது அவசியம்.
ஈரானின் முடக்கப்பட்ட பில்லியன் கணக்கிலான ஈரானிய நிதிகளை விடுவிப்பது என்ற துருப்புச்சீட்டு அமெரிக்காவின் வசம் இருக்கிறது. எனினும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை ஒபாமா போல் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு $1.7 பில்லியனை திருப்பித் தந்தது. இது 1979-ம் ஆண்டில் ஈரான் அமெரிக்க ராணுவ நம்பிக்கை நிதியில் வைப்புத்தொகையாகச் செலுத்திய $400 மில்லியன் அசல் மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட $1.3 பில்லியன் வட்டியாகும்.
ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பான சர்வதேச கடல்சார் அமைப்பு, சர்வதேச நீரிணைக்குக் கட்டணங்கள் வசூலிப்பது முறையல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. ஈரானின் கட்டணம் கோரும் நகர்வுக்கு எந்த நாடும் ஆதரவு தராது என்று நம்பலாம். கட்டணங்களை வசூலிக்கும் செயற்கையாக உருவான சூயஸ், பனாமா கால்வாய்கள் போல் அல்லாமல், ஹோர்முஸ் நீரிணை சர்வதேச நீர்நிலை என்பது ட்ரம்ப் நிர்வாகத்திற்குச் சாதகமான ஒன்று.
இந்தப் பிரச்னைகள் அனைத்தும் எப்படித் தீர்க்கப்படும் என்பது ஒரு புதிராகவே உள்ளது. அதில் ஒப்பந்தம் ஏற்படுமா என்பது இன்னும் புதிராகவே உள்ளது. நீரிணை திறப்புக்கே இவ்வளவு முயற்சி தேவை எனில், இன்னும் ஈரானின் யுரேனியம் இருப்பை ட்ரம்ப் விரும்பியபடி அவர்கள் ஒப்படைக்க இன்னும் என்னென்ன சாகசங்களை பாகிஸ்தானிகளும், மற்றவர்களும் நிகழ்த்த வேண்டியிருக்கும் என்று நம்மால் கற்பனை மட்டுமே செய்ய முடியும்.
ஒரு வேளை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட ஒப்பந்தம் ஏற்பட்டு பின்னர் முழு மூச்சாய் இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, அவற்றில்...
ஈரான் அணு சக்தியாக மாறும் எண்ணத்தை 20 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடுதல்
யுரேனியம் இருப்பு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகியவற்றைத் தர ஒப்புதல்
2000 கிலோமீட்டர் தாண்டும் எறிவிசை ஏவுகணைகளை இனி 1000 கிலோமீட்டர் மட்டுமே தாண்டக்கூடியவையாகச் செய்ய ஒப்புக் கொள்ளல்
இவை பற்றியெல்லாம் பேசி 30 அல்லது 60 நாள்களில் ஒரு தீர்வை எட்ட ஈரான் ஒத்துழைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆயினும், மிகவும் கடினமான பிரச்னைகளை பின்னோக்கித் தள்ளும் ஈரானிய கோரிக்கைக்கு ட்ரம்ப் இணங்கக் கூடும். உலகின் மிக முக்கியமான நீர்வழிப் பாதைகளில் ஒன்றை மூடி, அதை மீண்டும் திறக்கச் செய்வதையே ஒரு சாதனையாக மாற்றியிருப்பதே ஈரானியர்களின் வெற்றி. ஆனால், நீரிணையை அமெரிக்கர்களும் முடக்கியதால், அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயமும் ஈரானுக்கு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.