விலகிய திமுக.. இறந்துபோன I-N-D-I
விலகிய திமுக.. இறந்துபோன I-N-D-I-A கூட்டணி.. கடுமையாக விமர்சித்த பாஜக!
I-N-D-I-A கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெற இருக்கும் கூட்டத்தை, திமுக, புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ”I-N-D-I-A கூட்டணி மரணித்து புதைக்கப்பட்டுவிட்டது" என்று பாஜக விமர்சித்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து’I-N-D-I-A’ கூட்டணியை அமைத்தன. ஆனாலும், இது மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்றது. தவிர, ஒருசில மாநிலங்களில் இக்கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகளே காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு சட்டசபைத் தேர்தல்களைச் சந்தித்தன. இதனால், அந்தக் கூட்டணி மரணித்துவிட்டதாக பாஜக விமர்சித்திருந்தது. இந்தச் சூழலில்தான் மீண்டும் அக்கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ளன. அந்த வகையில், டெல்லியில் ஜூன் 8 அன்று I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா, தேசிய அளவில் I-N-D-I-A கூட்டணியுடன் உறவு தொடருமா என்று கேள்வி எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் I-N-D-I-A கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை திமுக எடுத்துள்ளது. திமுக, புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ”I-N-D-I-A கூட்டணி மரணித்து புதைக்கப்பட்டுவிட்டது" என்று பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா, "I-N-D-I-A கூட்டணி வெறும் காகிதத்திலும் டிவியிலும் மட்டுமே உள்ளது; நிஜத்தில் அது உடைந்துவிட்டது. காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதை திமுகவின் இந்த முடிவு காட்டுகிறது. I-N-D-I-A கூட்டணி தொடக்கம் முதலே அரசியல் சந்தர்ப்பவதத்தின் முன்மாதிரியாகத்தான் இருந்தது” என்று பூனாவாலா விமர்சித்துள்ளார்.