📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 28, 2026 01:33 AM

"ஈ.பி.எஸ் தலைமையில் ஆட்சியமைக்க தி.மு.க-வும் அ.தி.மு.க

"ஈ.பி.எஸ் தலைமையில் ஆட்சியமைக்க தி.மு.க-வும் அ.தி.மு.க

"ஈ.பி.எஸ் தலைமையில் ஆட்சியமைக்க தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் முயற்சி செய்தது உண்மையா?" - பெ.சண்முகம்

"'அ.தி.மு.க-வை அமைச்சரவையில் சேர்க்கும் யோசனையே கிடையாது’ என்று எங்களிடம் த.வெ.க தெளிவுபடுத்தியிருக்கிறது." - பெ.சண்முகம் எக்ஸ்க்ளூசிவ்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கு தி.மு.க முயற்சி செய்தது என்ற பகீர் தகவலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விகடனுக்கு அளித்திருக்கும் நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். அவர் முன்பு சில கேள்விகளை முன்வைத்தோம்...

“அரசியலுக்கு புதியவர்கள் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். புதிய முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள், புதிய அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?“

“புதிய அரசு அமைந்து பத்து நாட்கள்தான் ஆகின்றன. ஓர் அரசை மதிப்பிடுவதற்கு பத்து நாட்கள் போதாது. முதல்வரின் நேர்முக உதவியாளராக ஒரு ஜோதிடரை நியமித்தபோது, அதைக் கண்டித்தோம். உடனடியாக அந்த நியமனத்தை ரத்துசெய்தார்கள். இது வரவேற்கத்தக்க அணுகுமுறை.”

“அதே நேரத்தில், பல தவறான தகவல்களையும், தவறான புள்ளிவிவரங்களையும் வைத்து புதிய ஆட்சி குறித்து பொய்யான பிம்பத்தை உருவாக்குவதற்கான முயற்சி சமூகவலைதளங்கள் மூலமாக நடைபெறுகிறது. உதாரணமாக, சட்டமன்றத் தேர்தலில் பல பொதுத்தொகுதிகளில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதாகவும், அவர்களில் பலர் வெற்றிபெற்றதாகவும் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்தி பரப்பப்பட்டது…”

“பொதுத்தொகுதிகளில் பட்டியல் சமூகத்தினரை வேட்பாளர்களாக நிறுத்தினார்கள் என்பது குறித்துச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. பொதுத்தொகுதிகளில் பட்டியல் சமூகத்தினரைப் போட்டியிட வைப்பது வரவேற்கத்தக்கது. சி.பி.எம்-ஐ பொறுத்தளவில், கடந்த தேர்தல்களில், திண்டுக்கல்லில் எஸ்.ஏ.தங்கராஜ், குடியாத்தத்தில் லதா, மதுரவாயலில் பீமாராவ் ஆகியோர் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

நாங்கள் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்ட தேர்தல்களில், பொதுத்தொகுதிகளில் பட்டியல் சமூக வேட்பாளர்களை நிறுத்தி, இப்படி வெற்றிபெற வைத்திருக்கிறோம். த.வெ.க-வைப் பொறுத்தளவில் இந்த விவகாரத்தில் உண்மைத் தகவல் என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

பொய்ச் செய்தி வெளியிடுவது மிகவுத் தவறான செயல். தவறான செய்திகளை, போலித் தகவல்களை மக்களிடம் பரப்புவதன் மூலமாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது. அத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”

“அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஒரு தரப்பினர் தனியாகச் செயல்படுகிறார்கள். அதனால், அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. அதில், ஒரு பிரிவினர் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் அமைச்சரவையில் இடம்பெற்றால், த.வெ.க அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். உங்களின் இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம்?

“அ.தி.மு.க-வில் ஒரு பிரிவினர் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெறப்போவதாகச் செய்திகள் வந்தன. இத்தனை அமைச்சர்கள் என்பது போன்ற விவரங்கள்கூட வெளியாகின. அதனால், அ.தி.மு.க-வினர் அமைச்சரவைக்குள் வந்தால், அரசுக்கான ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுவோம் என்ற எங்கள் கட்சியின் கருத்தைத் தெரிவித்தோம். அதைத்தொடர்ந்து, எங்களைத் தொடர்புகொண்டு, 'அ.தி.மு.க-வை அமைச்சரவையில் சேர்க்கும் யோசனையே கிடையாது’ என்று எங்களிடம் த.வெ.க தெளிவுபடுத்தியிருக்கிறது.

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்று அ.தி.மு.க இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. இன்னும் சொல்லப்போனால், முழுக்க முழுக்க பா.ஜ.க-வால் தலைமை தாங்கப்பட்ட கூட்டணிதான் அது. பா.ஜ.க-வுடன் சேர்ந்துதான் அந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இப்போது ஒரு சந்தர்ப்பவாத நிலையை எடுத்து, எப்படியாவது அமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, அதில் கடுகளவும் மக்கள் நலன் கிடையாது.

ஆகவே, இப்படி சந்தர்ப்பாத நிலையை எடுத்து அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்று முயல்பவர்களை ஆட்சியில் சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. இரண்டாவது, நல்லாட்சியைத் தருவோம் என்று ஏற்கெனவே த.வெ.க வாக்குறுதி அளித்திருக்கிறது. தற்போது, கடந்த காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, பல ஊழல் வழக்குகளில் இருப்பவர்களை அமைச்சரவையில் சேர்த்தால், ‘க்ளீன் கவர்னன்ஸ்’ என்பதற்கான அடிப்படையே அடிபட்டுப்போய்விடும். இந்த ஆட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு விரோதமான செயலாகிவிடும். ஆகவே, அ.தி.மு.க-வை அமைச்சரவையில் சேர்க்கக்கூடாது என்று சொல்கிறோம்.”

“கொள்கை அடிப்படையில் நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், த.வெ.க-வைப் பொறுத்தளவில் அது ஆட்சியமைக்கப் பெரும்பாமைக்கே சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. இந்த நிலையில், ஐந்தாண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்ய முடியுமா என்ற அச்சமும், சந்தேகமும் த.வெ.க-வுக்கு இருக்கலாம். அ.தி.மு.க-வில் 25 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால், ஐந்து ஆண்டுகளுக்கு அச்சமின்றி ஆட்சியை நடத்தலாம் என்ற நம்பிக்கை த.வெ.க-வுக்கு இருக்கலாம். அதனால், அ.தி.மு.க-வை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் த.வெ.க-வுக்கு இருக்கலாம்தானே?”

“நல்லாட்சியைத் தருவோம், மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிப்போம், மாநில உரிமைகளைப் பாதுகாப்போம் என்ற கொள்கைகளில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியை த.வெ.க அளித்திருக்கிறது. ஆகவே, இந்த கொள்கைகளின் அடிப்படையில் த.வெ.க ஆட்சி தொடருமானால், அவர்களுக்கான எங்களுடைய ஆதரவும் தொடரும்.

த.வெ.க ஆட்சியைப் பொறுத்தளவில், அவர்களுக்கு போதுமான அளவுக்கு ஆதரவு இருக்கிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாமலே ஆட்சியை நடத்த முடியும். ஏற்கெனவே வெறும் 96 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி ஐந்தாண்டுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, த.வெ.க அச்சப்படவோ, வேறு யோசனைகளுக்குச் செல்லவோ அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

மதச்சார்பற்ற அரசாக இது தொடரும், சமூகநீதிதான் எங்களுடைய அரசாங்கத்தின் அடிப்படையான கொள்கை என்பதை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கொள்கைகளை உறுதியாக அவர்கள் கடைபிடித்தால் எந்தவிதமான பிரச்னையும் ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க-விலிருந்து ஒரு பிரிவு த.வெ.க அரசுக்கு ஆதரவு கொடுப்பது சட்டப்படி நடைமுறை சாத்தியம் அல்ல. அ.தி.மு.க ஆதரவு தந்தாலும் தரவில்லை என்றாலும், அவையில் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றிபெறும். ஆனால், அவர்கள் தானாக முன்வந்து ஆதரிக்கிறார்கள்.

சட்டப்படி அவர்கள் அப்படி அணி மாறி வந்து இங்கே சேர்வதற்கு வாய்ப்பே கிடையாது. 32 பேர் பிரிந்துவந்தால்தான் கட்சித் தாவல் தடைச்சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும். இப்போது அவர்களிடம் 25 எம்.எல்.ஏ-க்கள்தான் இருக்கிறார்கள். த.வெ.க பக்கம் வந்தால், அவர்கள் பதவியை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.”

“சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, த.வெ.க ஆட்சியமைக்கத் தயாரான நிலையில், தி.மு.க-வின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க ஒரு முயற்சி நடைபெறுவதாகச் செய்திகள் வந்தன. அப்படியான முயற்சி நடைபெற்றது என்றும், அந்த யோசனையை ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம் என்றும் சி.பி.எம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பொதுவெளியில் தெரிவித்தார். அந்த விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது?”

“அ.தி.மு.க கூட்டணி, தி.மு.க கூட்டணி ஆகிய இரண்டையும் இந்தத் தேர்தலில் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இந்த இரண்டு அணிகளுக்கும் எதிராகத்தான் மக்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று சட்டப்படி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புள்ள கட்சியாகத்தான் த.வெ.க இருந்தது.

இந்த நிலையில், த.வெ.க ஆட்சி அமைக்கக் கூடாது என்று அதைத் தடுக்கிற நோக்கத்தோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தி.மு.க ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு ஒரு முயற்சி நடைபெற்றது என்பது உண்மைதான். ஆனால், அந்த யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. காரணம், அது மக்களுடைய தீர்ப்புக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக எதிரும் புதிருமாக, எலியும் பூனையுமாக இருந்துவந்த அ.தி.மு.க-வும், தி.மு.க-வும், திடீரென்று இந்தத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்பது அல்லது ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு இன்னொரு கட்சி ஆதரவு அளிப்பது என்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அது முற்றிலும் ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாடு என்றுதான் மக்களால் கருதப்படும். ஆகவே, அது, மக்கள் தீர்ப்புக்கு எதிரானது, எனவே, அதை எங்களால் ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம்.”

“தி.மு.க ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவை. எனவே, இந்த முயற்சிக்கு தி.மு.க தரப்பில் உங்களை அணுகினார்களா?”

“சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் யாரை ஆதரிக்கிறார்களோ, அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற ஒரு நிலை இந்தத் தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது. இந்த மூன்று கட்சிகளில் யார் ஒருவர் மாறி மாறி முடிவெடுத்தாலும் யாருமே ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி அமைப்பது யார் என்பதைத் தீர்மானிக்கிற ஒரு வாய்ப்பு இந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கும், வி.சி.க-வுக்கும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், தி.மு.க ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க நாங்கள் ஆதரவு அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டோம்.

எங்களின் மாநிலக் குழுக் கூட்டத் தீர்மானத்திலும், அதை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். மக்களின் தீர்ப்புப்படி, த.வெ.க-தான் ஆட்சியமைக்க வேண்டும். எனவே, எங்களுடைய ஆதரவை த.வெ.க-வுக்கு அளித்திருக்கிறோம்.”

“த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவுக் கடிதங்களை நீங்கள் கொடுத்த பிறகு, தி.மு.க., அ.தி.மு.க ஆதரவுடன் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனை முதல்வர் ஆக்குவதற்கு ஒரு முயற்சி நடைபெற்றதாகப் பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதில் என்ன நிகழ்ந்தது என்பதும் முழுமையாகப் பொதுவெளிக்கு வரவில்லையே?”

“த.வெ.க-வுக்கு இடதுசாரிகள் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் அளித்த பிறகு, எங்களுடைய ஆதரவு இல்லாமல் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே கிடையாது. அவர்கள் என்ன யோசனை வைத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. அந்த ரிலையபிள் சேர்ஸ் யார் என்பதைத் தோழர் திருமாவளவன்தான் தெரிவிக்க வேண்டும்.”

(அடுத்த பாகத்தில் நேர்காணல் நிறைவடையும்)