ஈரான் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தார் டிரம்ப்: அமெரிக்க தேர்தலுக்கு பின் மீண்டும் குண்டு வீச திட்டம்
வாஷிங்டன்:ஈரானின் போர் நிறுத்தம் தொடர்பான முன் மொழிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர், அந்நாடு மீது மீண்டும் குண்டுகளை வீசி தாக்குதலை தொடரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஈரான், அமெரிக்கா இடையேயான போர் 6 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. போர் தொடரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.
போர் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அமெரிக்காவுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும் 7 நாட்கள் கொண்ட அமைதி முன்மொழிவு திட்டத்தை ஈரான் முன் வைத்தது. அமெரிக்கா தமது கடற்படைகளை திரும்ப பெற்றுக் கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் ஈரான் அதில் சம்மதம் தெரிவித்து இருந்தது.
ஆனால், ஈரான் மொழிந்த இந்த திட்டத்தை அமெரிக்கா முற்றிலும் நிராகரித்து உள்ளதோடு, அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஈரான் மீது குண்டுகளை வீச அதிபர் டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். அவர் இதை தனது உதவியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அதிபர் டிரம்பின் இந்த திட்டத்தை கூறி உள்ள அந்நாட்டு அதிபர்கள்,நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என்றும் கூறி இருக்கின்றனர்.
போர் நிறுத்த முன்மொழிவை டிரம்ப் நிராகரித்துள்ள அதே வேளையில், அவர் தமது ட்ரூத் சோஷியல் வலைதளத்தில் வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வரைபடத்தில் ஹார்முஸ் ஜலசந்திக்கு, டிரம்ப் ஜலசந்தி என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா எத்தனிப்பது இது முதல் முறையல்ல. ஆகஸ்ட் மாதம், ஹார்முஸ் ஜலசந்தி புதிய அமெரிக்க பிரதேசமாக மாறக்கூடும் என்று கூறி, டிரம்ப் ஒரு வரைபடத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.