இளைஞர்களுக்கு சரியான பாதையை காட்டுங்க: எம்.பி.,க்களுக்கு மோடி அட்வைஸ்
புதுடில்லி: ''இளைஞர்களை தவ றான வழிக்கு செல்லவிடா தீர்கள்; சரியான திசையை காட்டி அவர்களை நல் வழிபடுத்துங்கள்,'' என, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க் களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பார்லி., வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களின் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ''இளைஞர்கள் தவறான வழிக்கு எளிதாக சென்றுவிடுவர். அப்படி செல்பவர்களை மீண்டும் நல்வழிபடுத்துவது சவாலான காரியம். எனவே, இளைஞர்கள் பாதை மாறாமல் செல்வதை தடுத்து நிறுத்தி, அவர் களுக்கு சரியான திசையை காட்ட வேண்டியது நம் பொறுப்பு,'' என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: 'நீட்' வினாத்தாள் கசிந்த தகவல் வெளியானதுமே, மத்திய அரசு விரைந்து செயல்பட்டதாக எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கூறினார். இது தொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே சமயம், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, நீட் மறுதேர்வு நடத்த முன்னுரிமை தரப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன் முடிவுகளும் தாமதம் இல்லாமல் வெளியிடப்பட்டன.
எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமரும் தெரிவித்தார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
வினாத்தாள் கசிவு, கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல; தேச நலன் சார்ந்த விவகாரம். எனவே, கட்சி பாகுபாடுகளை மறந்து, மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.