இளையரின் தளரா இறைத் தொண்டு
சிங்கப்பூரின் பரபரப்பான வீதிகள் உறங்கிய பின்பும், சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இளம் கரங்கள் சில ஓய்வின்றி உழைக்கின்றன.
2027ல் 200ஆம் ஆண்டுநிறைவை எட்டவுள்ள இக்கோயிலில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெறும் தீமிதித் திருவிழா ஒருநாள் மட்டும் நடைபெறும் நிகழ்வன்று. இதில் பங்கேற்கும் பக்தர்களின் தவக்காலம் ஆகஸ்ட் 17ல் தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி பூக்குழி இறங்கும்வரை நீடிக்கிறது.
பால்குடம், மாவிளக்கு எனப் பலவிதமான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பக்தர்கள் மனநிறைவோடு இறைவனைத் தரிசிக்கையில், பின்னணியில் இந்த இளையர்கள் ஊண், உறக்கம் தவிர்த்துச் சேவையாற்றுகின்றனர்.
வேலை, படிப்பிற்கு நடுவே கிடைக்கும் ஓய்வு நேரத்தை இறைப்பணிக்காக அர்ப்பணிக்கும் இவர்களின் உழைப்பின் பின்னால் ஆழமான நன்றிக்கடனும் அடையாளத்தைக் காக்கும் பொறுப்புணர்வும் நிறைந்துள்ளது.
நன்றிக்கடனாக மாறும் தொண்டூழியம்
பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதற்குப் பின்னாலும் தொண்டூழியர்களின் ஆரவாரமற்ற உழைப்பு நிறைந்திருக்கிறது. தரையில் பிசுபிசுப்பாக ஒட்டியிருக்கும் மாவையும் சர்க்கரையையும் தூய்மைப்படுத்தி, அமைதியாக மாவிளக்கு பிசையும் பணியை 38 வயதான பள்ளி ஆசிரியை கார்த்திகா ஜெயகணேஷ் இந்தப் பண்டிகையின்போது மேற்கொள்கிறார்.
ஐந்து வயதில் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு அகல் விளக்குகளைச் சுத்தம் செய்யத் தொடங்கிய அவரது வாழ்வோடு இச்சேவை பின்னிப் பிணைந்துள்ளது.
“இதனை ஒரு தொண்டு என்பதைவிட, அம்மன் எனக்களித்த நல்வாழ்வுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகவே பார்க்கிறேன். மாரியம்மன் கோயிலே என் ‘தாய் வீடு’,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் திருவாட்டி கார்த்திகா.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தரையைச் சுத்தம் செய்வது, பால்குடங்களைக் கழுவுவது போன்ற பணிகளால் அலுப்புக்குப் பதிலாக மனநிறைவை உணர்வதாகக் கூறும் அவர், இதனைப் பண்பாடாகப் பேணி அடுத்த தலைமுறையினர் பின்பற்றவேண்டும் என விரும்புகிறார்.
சோர்வை மறக்கடிக்கும் கோயில் தொண்டு
பகலில் நிதித்துறையில் நெறிமுறை அதிகாரியாகக் (Compliance Officer) கடுமையான வேலைப்பளுவுடன் சுழலும் 32 வயது ஜதீஸ்வரன் நாயுடு, இரவில் அதே சுறுசுறுப்புடன் ஆலயத் தொண்டில் ஈடுபடுகிறார்.
கருவறையின் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு உதவுவது, பிரம்மாண்டமான அலங்காரங்களைச் செய்வது ஆகியவற்றில் இவர் ஈடுபடுகிறார்.
“திருவிழா நேரங்களில் கடும் சோர்வோடுதான் வேலை செய்வோம். ஆனால், ஒரு குழுவாக இணைந்து ஒருவருக்கொருவர் ஊக்கமளித்துக்கொள்ளும் உணர்வை வேறெங்கும் பெற முடியாது,” என்கிறார் இந்த இளையர்.
இந்தத் தொண்டில் 10 ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் திரு ஜதீஸ்வரன் மலர்களைக் கொண்டு தெய்வச்சிலைகளின் திருமேனி அலங்காரத்தை முறையாகச் செய்யும் விதத்தை முந்தைய தலைமுறையினரிடம் இருந்து கற்றுக்கொண்டதாய்க் கூறினார்.
ஆலயத் தொண்டூழியம் வழி கற்றுக்கொண்ட இத்தகைய திறன்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்பது இவரது விருப்பம்.
தகிக்கும் அனலில் உணர்ந்த உண்மை
சாதாரண பக்தராகத் தீமிதியில் பங்கேற்று வந்த 35 வயது ஜெயகௌதம் அண்ணாதுரைக்கு, ‘கரகம்’ ஜோடிப்பதைப் பார்க்கும் ஆர்வமே 24 வயதில் அவரைத் தொண்டூழியராக ஈர்த்தது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நீரிழிவு, உடற்பருமன் ஆய்வாளராகப் பணிபுரியும் இவருக்கு, தற்செயலாகப் ‘பூக்குழி’ அமைக்கும் குழுவில் வாய்ப்புக் கிடைத்தது. தீமிதி நாளில் பூக்குழிக்கு அருகிலுள்ள ‘பால் குழியில்’ (Milk pit) பக்தர்களைப் பாதுகாப்பாகக் கைப்பிடித்து நகர்த்தும் பணியில் அவர் ஈடுபட்டார்.
“தகிக்கும் அனலுக்குப் பக்கத்திலேயே பல மணிநேரம் நின்று, ஓடிவரும் பக்தர்களுக்கு உதவும் வேலை எவ்வளவு கடுமையானது என்பதை நேரடியாக உணர்ந்தேன்,” என்றார் திரு ஜெயகௌதம்.
சோர்வோடு வரும் பக்தர்களின் எரிச்சலைப் பொறுமையோடு கையாளக் கற்றுக்கொண்ட அவர், “கோயில் தொண்டூழியம் வழி தொடர்பு வட்டம் விரிவடைகிறது. வாழ்வில் ஒரு தேவை என்றால் தோள்கொடுக்க இந்தக் கோயில் நண்பர்கள் இருப்பார்கள். இந்தத் தனித்துவமான பிணைப்பு இளையர்களுக்கு உரம் அளிக்கும் என நம்புகிறேன்,” என்கிறார்.
பாரம்பரியத்தின் புதிய பலம்
கடுமையான உடல் உழைப்பைப் பொருட்படுத்தாமல் உழைக்கும் இந்த இளையர்களைப் பார்க்கும்போது தமக்கும் பெருமிதம் மேலோங்குவதாக ஸ்ரீ மாரியம்மன் கோயில் தலைவர் டி. ஜி.கிரிதரன் கூறினார்.
“இன்றைய இளையர்கள்தான் நாளைய நம்பிக்கையின் அடையாளம். ஸ்ரீ மாரியம்மன் கோயில் போன்ற பாரம்பரிய மையத்தில், இளையர்களை ஊக்கப்படுத்துவது என்பது நமது புனிதமான பாரம்பரியம் அடுத்தடுத்த தலைமுறையினர் இடையிலும் செழித்தோங்குவதை உறுதிசெய்வதற்காகத்தான்,” என்று அவர் கூறினார்.
“அவர்கள் பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை. மாரியம்மனுடனான ஆன்மிகப் பிணைப்பே அவர்களை இயக்குகிறது. இவர்கள் இருப்பதால், நமது பாரம்பரியமும் நம்பிக்கையும் வருங்காலத்திலும் நிச்சயமாகத் தொடரும்,” என்று திரு கிரிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.