இலங்கை டெஸ்ட் தொடர்: பும்ரா காயம் காரணமாக நீக்கம், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி சேர்க்கை
இலங்கை டெஸ்ட் தொடர்: பும்ரா காயம் காரணமாக நீக்கம், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி சேர்க்கை
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பும்ரா முழுமையாக குணமடையவில்லை. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் மறுவாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவருக்கு வீக்கம் குறையாததால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலே நகரில் தொடங்கும் இந்த முக்கிய டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பும்ராக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள 29 வயதான ஆகிப் நபி, கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை சீசன்களில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
குறிப்பாக 2025-26 சீசனில் 60 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜம்மு காஷ்மீர் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் ரஞ்சி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
பாரமுலாவை சேர்ந்த ஆகிப் நபி, பர்வேஸ் ரசூல் மற்றும் உம்ரான் மாலக்கிற்கு பிறகு இந்திய மூத்த தேசிய அணிக்கு தேர்வாகும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3-வது வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இருப்பினும், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் ஜம்மு காஷ்மீரின் முதல் சர்வதேச வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இலங்கைத் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்குக் காயங்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
பும்ரா தவிர ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
சாய் சுதர்சன் பாத காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: சுப்மன் கில்(கேப்டன்), கே.எல். ராகுல்(துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன்*, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி.