இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம்.. ராகுல், படிக்கல் நிதானம்.. மழையால் போட்டி பாதிப்பு
இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம்.. ராகுல், படிக்கல் நிதானம்.. மழையால் போட்டி பாதிப்பு
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாளில், மழை குறுக்கிட்டதால் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் நிறுத்தப்படும் போது, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்திய அணி 296 ரன்கள் பின்தங்கியுள்ளது.
முன்னதாக, இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் பூஜ்ஜிய ரன்னுக்கு 1 விக்கெட் என சரிந்த இந்திய அணியை தேவ்தத் படிக்கல் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி மீட்டெடுத்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், அவருக்கு ஆதரவாக நிதானமாக விளையாடிய கே.எல். ராகுல் 23 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து இந்திய அணியை சரிவிலிருந்து பாதுகாத்துள்ளது.
இந்திய அணியின் வழக்கமான கேப்டன் சுப்மன் கில்லுக்கு பயிற்சியின் போது வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு இந்த பயிற்சி போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், கே.எல். ராகுல் தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்துகிறார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கிரிக்கெட் லெவன் அணி தனது முதல் இன்னிங்ஸை 363/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நிஷான் மதுஷ்கா 66 ரன்கள் மற்றும் ரவிந்து ரசந்தா 71 ரன்கள் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. பின்னர் வந்த சோனல் தினுஷா பொறுப்புடன் விளையாடி 52 ரன்கள் எடுத்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரால் இந்த ஆட்டத்தில் விக்கெட் எதுவும் கைப்பற்ற முடியவில்லை. எனினும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.