📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 06, 2026 04:30 PM

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: இந்தியா

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: இந்தியா

கொழும்பு: இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டில் ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழ் சமூகத்தின் விருப்பங்களையும் உரிமைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டப்பிரிவுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய திரு மிஸ்ரி, இலங்கைத் தமிழ் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழ் தலைவர்களையும் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அப்போது, இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திரு மிஸ்‌ரி வலியுறுத்தினார்.

இந்த உயர்நிலைச் சந்திப்புகளின்போது, இருநாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தவும் இருதரப்புச் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை வரவேற்பதாகவும் இரு நாடுகளும் அறிவித்தன.

மேலும், டிட்வா சூறாவளிப் பாதிப்புகளுக்குப் பிறகு, இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவித் திட்டங்களின் செயலாக்கம் குறித்தும் திருப்தி தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே திட்டத்துக்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர், கால்நடைத் துறைக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் என $350 மில்லியன் கடன் உதவி உடன்பாடுகளும் பரிமாற்றம் செய்யப்பட்டன.

இதுதவிர, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், சம்பூர் சூரியமின் திட்டப் பணிகள், காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீரமைத்து நவீனமயமாக்கும் திட்டம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் திட்டங்களை விரைவுபடுத்தவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.