📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 05, 2026 12:02 PM

இலங்கையில் இந்திய அணி * டெஸ்ட் தொடருக்கு தயார்

இலங்கையில் இந்திய அணி * டெஸ்ட் தொடருக்கு தயார்

கொழும்பு: இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, இலங்கை சென்றடைந்தது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஆக. 15-19ல் காலேவில் நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் ஆக. 23-27ல் கொழும்புவில் நடக்கும். இதற்குத் தயாராகும் வகையில், இலங்கை உள்ளூர் அணியுடன், மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

ஆக. 7-9ல் கொழும்புவில் உள்ள என்.சி.சி., மைதானத்தில் இப்போட்டி நடக்கும். இதற்கான இந்திய அணியினர் நேற்று, இலங்கையின் கொழும்பு சென்றடைந்தனர்.

சுதர்சன் இல்லை

சமீபத்திய இந்திய 'ஏ' அணியின் இலங்கை பயணத்தின் போது, தமிழகத்தின் சாய் சுதர்சன், கால் விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டும் வரும் இவர், பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., உயர் செயல்திறன் மையத்தில், தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார்.

இதனால் இந்திய அணி வீரர்களுடன் செல்லவில்லை. உடற்தகுதி பெறும் பட்சத்தில் இரண்டாவது டெஸ்டில் சாய் சுதர்சன் விளையாடலாம்.

இதுகுறித்து வெளியான செய்தியில்,'' சாய் சுதர்சன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுகிறார். அடுத்த மூன்று அல்லது நான்கு நாள் அவரது உடற்திறன் குறித்து மதிப்பீடு நடக்கும். இதன் பிறகு, விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.