‘‘இலங்கையில் ஒரு தமிழராக வாழ்வது மிகவும் துன்பமான விஷயம்!’’
‘‘இலங்கையில் ஒரு தமிழராக வாழ்வது மிகவும் துன்பமான விஷயம்!’’
இது மாதிரியான நெருக்கடிகள் எனக்குப் புதிதல்ல. 2024-ல் `பயங்கரவாதி' நாவல் வெளிவந்தபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.
ஈழத்திலிருந்து கதை, கவிதை, கட்டுரைகள் எனத் தீவிரமாக எழுதிவரும் படைப்பாளி தீபச்செல்வன். யுத்தம், அரசியல், எளிய மக்களின் வாழ்க்கைச்சூழலை உள்ளடக்கமாகக்கொண்டு அவர் எழுதிய பல நூல்கள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வாசகப் பரப்பைச் சென்றடைந்திருக்கின்றன. கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன், கிளிநொச்சியில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
எழுத்துக்காகத் தொடர்ந்து சிங்கள அரசின் நெருக்குதலுக்கு உள்ளாகிவரும் தீபச்செல்வனுக்கு இப்போது மேலுமொரு நெருக்கடி. சமீபத்தில் அவர் எழுதி, யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட `எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்' என்ற நேர்காணல் நூலையும், யாப்பு வெளியீடாக வந்த `இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்' என்ற கட்டுரைத் தொகுப்பையும் இலங்கை சுங்கத்துறை தடுத்துவைத்திருக்கிறது. தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல் உருவாகியிருக்கும் நிலையில், சிங்களப் படைப்பாளிகளே தீபச்செல்வனுக்கு ஆதரவாக இலங்கை முழுவதும் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள். ``என்ன நடந்தது?’’ கிளிநொச்சியிலிருக்கும் தீபச்செல்வனிடம் பேசினோம்.
வழக்கமாக இப்படி அனுப்பி வைக்கப்படும் நூல்களில் பிரபாகரன் பற்றியோ, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியோ ஏதேனும் இருந்தால் தடுத்து, கையில் கிடைக்காமல் செய்துவிடுவார்கள். 2020-ல் `நடுகல்' நாவலின் 60 பிரதிகளை டிஸ்கவரி வேடியப்பன் அனுப்பியிருந்தார். அப்போதும் எனக்கு சுங்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. ஆனால் நான் செல்லவில்லை. அதனால் அந்தப் புத்தகங்கள் அப்படியே போய்விட்டன. இலங்கையில் இருக்கிற சூழலில் அழைப்பாணையை ஏற்று எந்தப் படைப்பாளியும் நேரில் செல்ல மாட்டார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் கவிஞர், விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் எழுதுவதையே நிறுத்திவிட்டார்.
இப்போதும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நூல்களையும் சுங்கத்துறை தடுத்து வைத்துக்கொண்டது. `நாட்டின் ஒற்றுமைக்கு இந்த நூல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சந்தேகிக்கிறோம். அதனால் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வந்து இந்தப் புத்தகங்களை விடுவித்துக்கொள்ளலாம்' என்று கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தனர். அதன் பிறகு கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, அரசுக்கு நெருக்கமான சிங்களப் படைப்பாளிகளை வைத்து ஒரு கமிட்டியை அமைத்தார். கலாசாரத்துறை அமைச்சர் ஓர் எழுத்தாளரும்கூட. சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட என் நூல்களை அவர் வாசித்திருக்கிறார். இந்தப் பிரச்னை தொடங்கிய போதே, `நீங்கள் வருந்த வேண்டாம். நான் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பேன்' என்று எனக்குச் சொன்னார். பிறகு அவர் நிலைப்பாடு மாறியது.
இது பற்றிப் பேச கலாசார அமைச்சர் தலைமையில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். நான், கவிஞர் அனுஷா சிவலிங்கம், சிங்கள எழுத்தாளர் கத்யானா அமரசிங்க, சட்டத்தரணி விரஞ்சன கேரத், மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருள்தந்தை சக்திவேல் ஆகியோருடன் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். அங்கு 40-க்கும் மேற்பட்ட சிங்களப் படைப்பாளிகள் எனக்கு ஆதரவாகத் திரண்டிருந்தார்கள்.
நான் தொடர்ச்சியாகச் சந்தித்துவரும் சிக்கல்களை அந்தக் கூட்டத்தில் எடுத்துக் கூறினேன். `ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தோ, விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என்றோ எந்தச் சூழலிலும் எழுதுவதில்லை. ஆனால், இன்னமும் எங்களை இலங்கை அரசும் சட்டங்களும் சந்தேகித்துக்கொண்டே இருப்பது வேதனையைத் தருகிறது' என்று சொன்னேன்.
அதன் பிறகு அரசு எனது நூல்களை விடுவிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், `சயனைட்', `நடுகல்', `பயங்கரவாதி' ஆகிய நாவல்களை விடுவித்துவிட்டு, `எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்' நூலையும் `இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்' நூலையும் தடுத்து வைத்து விட்டார்கள். அந்தப் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளனவா என்று இதுவரை தெரியப்படுத்தவில்லை.
தொடர்ந்து சிங்கள இதழ்களில் இது பற்றிக் கட்டுரைகள், கருத்துச் சித்திரங்கள், நேர்காணல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. புத்தகங்களை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்த விஷயத்தை கவனப்படுத்தி, பொதுத்தளத்துக்குக் கொண்டு வந்தது முழுக்க முழுக்க சிங்களப் படைப்பாளிகளும் செயற்பாட்டாளர்களும்தான். அவர்கள் கொடுத்த வலுவான அழுத்தம்தான் அரசுக்கு நெருக்கடியானது.
கடந்தகாலத்தில் படைப்பாளிகளோடு மிக நெருக்கமாக இருந்த இடதுசாரிகள் நடத்துகிற இந்த அரசாங்கம் இப்படிக் கருத்துரிமைக்கு எதிராக நிற்பது வருத்தமாக இருக்கிறது. `பயங்கரவாதி' நாவல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டபோது, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நான் அழைக்காமலேயே நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டு நூலை வாங்கிச் சென்றார். கடந்தகாலத்தில் பத்திரிகையாளர்கள், படைப்பாளிகளுக்கு நெருக்கடி வரும்போது இப்போது அரசை நடத்துபவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் இவர்களே நெருக்கடி தருகிறார்கள்.
ஏற்கெனவே ஷோபா சக்தியின் மண்டைத்தீவு படுகொலை பற்றிய புத்தகமும், ரயாகரன் என்ற அரசியல் ஆய்வாளரின் நூல் ஒன்றும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன. சில இஸ்லாமிய எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போதுதான் இது பேசுபொருளாக ஆகியிருக்கிறது.
இந்தச் சூழல், மிகப்பெரிய மனச்சோர்வைக் கொடுக்கிறது. என் புத்தகங்களைத் தடுப்பது, என் வாழ்வுரிமையைத் தடுப்பது போல! இலங்கையில் ஒரு தமிழராக வாழ்வது மிகவும் துன்பமான ஒரு விஷயம். இந்த நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து போய் வேறொரு மண்ணில் என்னால் வாழ முடியாது. இந்த நிலத்தில் வாழ்ந்துகொண்டு என்னால் எழுதாமலும் இருக்க முடியாது.
மேஜர் கமால் குணரத்ன என்ற ராணுவத் தளபதி, `நந்திக்கடலுக்கான பாதை' (Road to Nandikadal) என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கியத் தளபதிகள் படங்களையெல்லாம் போட்டு அவ்வளவு புகழ்ந்து எழுதியிருக்கிறார். அவர் தலைவர் பிரபாகரன் பற்றி புத்தகம் எழுதலாம். காரணம், அவர் சிங்களவர். நான் தலைவர் பிரபாகரன் பற்றி எழுதினால் அது பிரச்னை. காரணம், நான் தமிழன். இது இனப் பாரபட்சம், இந்த நிலை மாற வேண்டும். மாறாவிட்டால், இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகோ இலங்கையில் ஒரு தமிழ்ப் படைப்பாளி இதே நிலைமையை எதிர்கொள்ள வேண்டி வரும்...’’ என்கிறார் வருத்தத்துடன்!