இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 70,486 விண்ணப்பங்கள்
ETV Bharat / education-and-career
இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 70,486 விண்ணப்பங்கள்
2026-27ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மதிப்பெண் மற்றும் அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
Published : July 24, 2026 at 12:56 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்காக 70,486 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் இளநிலை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி, 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் https://tnmedicalselection.net என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி, ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு மதிப்பெண்கள், தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே சரிபார்க்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு வரிசை எண் (Roll Number) மற்றும் நீட் நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆகியவை அடிப்படையில் தேசிய தேர்வு முகமை அளிக்கும் மதிப்பெண்கள் பெறப்பட்டு, இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வருடம் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் கால அவகாசம் ஜூலை 23 மாலை 5 மணியுடன் நிறைவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியின் பேரில், மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இறுதிச் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டை பொறுத்தவரை மருத்துவப் படிப்பில் சேர ஆன்லைன் மூலம், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,760 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 29,726 மாணவர்களும் என மொத்தமாக 70,486 மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படி சரிபார்க்கப்பட்டு, அதில் போலியான விண்ணப்பங்கள் அல்லது தவறான சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த விண்ணப்பங்களை நீக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் பின்னர், விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களின் நீட் மதிப்பெண் விவரங்களை தேசிய மருத்துவ முகமையிடமிருந்து பெற்று, அதன் பிறகு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தேசிய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, மாணவர்கள் சேர்க்கைக்கான கால அட்டவணையை தற்போதுவரை வெளியிடாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.