📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 03:04 AM

இலவச வேட்டி சேலை உற்பத்தி திட்டம் தி.மு.க. தலையீடு: நெசவாளர்கள் அதிருப்தி

இலவச வேட்டி சேலை உற்பத்தி திட்டம் தி.மு.க. தலையீடு: நெசவாளர்கள் அதிருப்தி

திருப்பூர்: இலவச வேட்டி சேலை உற்பத்தி திட்டத்தில், தி.மு.க., வினர் தலையீடு ஓங்கியுள்ளதாக நெசவாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலையை தமிழக அரசு வழங்குகிறது. இதற்காக ஆண்டுதோறும், தலா 1.80 கோடி எண்ணிக்கையிலான வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வாயிலாக இதற்கான உற்பத்திக் குறியீடுகள் மாநிலம் முழுவதுமுள்ள விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.

மாவட்டம் தோறும், இயங்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு அதன் உற்பத்தி திறனுக்கு ஏற்ப இந்த உற்பத்தி ஆர்டர் வழங்கி, உற்பத்தி செய்து பெற்று, வினியோகிக்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 2020ம் ஆண்டு வாக்கில் 22 சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இவற்றில், ஏறத்தாழ, 20 லட்சம் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதன்பின், பல காரணங்களால் சில சங்கங்கள் தங்கள் செயல்பாட்டைக் குறைத்துக் கொண்டன. சில சங்கங்கள் மூடப்பட்டன.

நடப்பாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் மூன்று சங்கங்களுக்கு மட்டுமே உற்பத்தி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில், 2.75 லட்சம் சேலை மற்றும் 3 லட்சம் வேட்டிக்கான ஆர்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த விசைத்தறியாளர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க விசைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:

கடந்த 2020ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் சங்கங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த 2024ல் 15 ஆகவும், 2025ல் எட்டு சங்கமாகவும் குறைந்து தற்போது மாவட்டத்தில் ஏழு சங்கம் மட்டுமே உள்ளது. அதிலும், நடப்பாண்டு, 3 சங்கங்களுக்கு மட்டுமே உற்பத்தி ஆர்டர் அளித்துள்ளனர்.

அவ்வகையில், நடப்பாண்டில் நான்கு சங்கங்களுக்கு மூடுவிழா நடத்தியுள்ளனர். இந்த மூன்று சங்கங்களுமே தி.மு.க. வினர் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு முன் பணியாற்றிய உதவி இயக்குநர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், அப்போதைய ஆளும் கட்சியினர் சார்ந்த சங்கங்களுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டார்.

இது தற்போதும் தொடருகிறது. அவர், இங்கிருந்து மாறுதல் ஆன பின்னரும், இங்கு ஆதிக்கம் செலுத்துகிறார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அதிகாரத்தில் இருந்தாலும், தி.மு.க.வுக்கு விசுவாசம் காட்டும் அதிகாரிகள் அப்படியே உள்ளனர். இது குறித்து கைத்தறி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.