மெர்சி ரிலீஃப்: நேப்பாளம், பிலிப்பீன்ஸ் வெள்ள நிவாரணம்
இயற்கை பேரிடர், நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேப்பாளம், பிலிப்பீன்ஸ் நாடுகளுக்கு அவசரகால நிவாரண உதவிகளை விரைந்து வழங்க சிங்கப்பூரின் தொண்டு நிறுவனமான ‘மெர்சி ரிலீஃப்’ போர்க்கால அடிப்படையில் ஆயத்தமாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து, களம் இறங்கி அத்தியாவசிய உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளது இந்த அறநிறுவனம்.
நேப்பாள-சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகச் சிதைந்து, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உணவுப் பொட்டலங்கள், தற்காலிக இருப்பிட சாதனங்கள், தூய்மையான குடிநீர் சுகாதாரப் பொருட்களை வழங்க ‘மெர்சி ரிலீஃப்’ நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேவேளையில், ‘லூயிஸ்’, ‘மேமே’ ஆகிய இரட்டைப் புயல்களால் நிலச்சரிவு, பெரும் வெள்ளத்தைச் சந்தித்த பிலிப்பீன்சில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கான உதவிகளும் கிடைக்கவுள்ளன.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை அங்கு செல்லவிருக்கும் சிங்கப்பூர் நிவாரணக் குழுவினர், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குவர்.
இது குறித்துப் பேசிய நிறுவனத்தின் அனைத்துலக திட்ட மேலாளர் விதாஸ் வர்மா, “உள்ளூர் அமைப்புகளின் வழிகாட்டுதல் மூலம் இதுவரை உதவி கிடைக்காத குடும்பங்களை எளிதாகக் கண்டறிந்து, தேவையான நபர்களுக்குச் சரியான நேரத்தில் உதவிகள் சென்றடையச் செய்ய முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ள சூழலில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவோடும் உள்ளூர் அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நேப்பாளம் பிலிப்பீன்ஸ் மக்களுக்குத் தேவையான அவசர உதவிகள் தடையின்றி கொண்டு சேர்க்கப்படும் என்று தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லியோன் யிப் உறுதியளித்துள்ளார்.