இணையத் தீங்குகளுக்கு எதிராக விரைந்து செயல்பட புதிய திட்டம்: எட்வின் டோங்
இணையத் தீங்குகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளங்களுடன் இணைந்து அரசாங்கம் செயல்படும் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
குற்றம் சார்ந்த உள்ளடக்கங்களை அகற்றுவது, இணையக் குற்றவாளிகளுக்குத் தடைவிதிப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் அந்தச் செயல்பாடு இருக்கும் என்றார் அவர்.
இணையத் தீங்குகளால் பாதிக்கப்படுவோருக்குச் சரியான நேரத்தில் தீர்வு கிட்டவும் சிறந்தமுறையில் பாதுகாப்பை அளிக்கவும் உதவக்கூடிய சிங்கப்பூரின் புதிய சட்டக் கட்டமைப்பின்கீழ் அந்த நடவடிக்கை அமையும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங் கூறினார்.
புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கவும் நடைமுறைப்படுத்தவும் ஆதரவளித்த சமூகம், கல்வித்துறை, அரசாங்கம் மற்றும் வணிகக் கூட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்க, ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ‘தெமாசெக் ஷாப்ஹவுஸ்’ கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
“புதிய சட்டக் கட்டமைப்பை இணையத்தளங்கள் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு, குற்றங்களுக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுக்க அவற்றுடன் இணைந்து அரசாங்கம் செயல்படும்.
“தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் இணையத்தில் பரவும்போது, கூடுதலாக ஒரு மணி நேரம் அவற்றுக்கு அனுமதி அளிப்பதுகூட சில சமயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றார் அவர்.
2025ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்பு (நிவாரணம் மற்றும் பொறுப்புக்கூறல்) சட்டத்தின்கீழ், இணையக் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, தகவல் தெரிவிக்கப்பட்ட 6 முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“இந்தக் காலக்கெடுவை நாங்கள் மிகவும் கவனமாக வரைமுறைப்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களிலிருந்து, விரைவாகச் செயல்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தோம்,” என்று திரு டோங் கூறியுள்ளார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“அதேவேளை, புதிய சட்டக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளவும் அதற்கேற்ப தங்களின் செயல்முறைகளை மாற்றியமைத்துச் செயல்படவும் சமூக ஊடகத் தளங்களுக்குக் கால அவகாசம் தேவை என்பதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம். எனவே, ஒரு தொடக்கப் புள்ளியாக அதற்கான காலக்கெடு அறிமுகம் செய்யப்பட்டது,” என்றார் திரு டோங்.