📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 24, 2026 07:05 PM

ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தேனா?

ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தேனா?

ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தேனா? - ஜான் பாண்டியன் பிரத்யேக பேட்டி

"சாந்தியும் ஜெம் வீரமணியும் குடும்பம் நடத்தினார்கள். அவர்களுக்குள் சண்டை வந்து விட்டதால் வீரமணியை மிரட்டி ரூ.20 கோடி வாங்கித் தரச் சொன்னார்கள்" என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Published : September 24, 2026 at 6:41 PM IST

-BY இரா.மணிகண்டன்

திருநெல்வேலி: "சாந்தியும் ரஞ்சன் குமாரும் என்னை சந்தித்து ஜெம் வீரமணியிடம் 20 கோடி ரூபாய் வாங்கி தர சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்" என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் சிறுமிகளை வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கில், சாந்தி என்ற பெண் உட்பட இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெம் வீரமணிக்கு ஆதரவாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் உதவி செய்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சன் குமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'ஜெம் வீரமணி விவகாரத்தில், தன்னையும் வழக்கில் கைதாகியுள்ள சாந்தி என்ற பெண்ணையும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் மிரட்டினார்' என குறிப்பிட்டிருந்தார்.

அதாவது இந்த வழக்கில் ஜெம் வீரமணிக்கு ஆதரவாக ஜான்பாண்டியன் செயல்பட்டதாக ரஞ்சன் குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்திலும் ரஞ்சன் குமார் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள ஜான்பாண்டியனை 'ஈடிவி பாரத்' சார்பில் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம். இந்த விவகாரம் தொடர்பாக நாம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதன் விவரம்:

கேள்வி: ஜெம் வீரமணி விவகாரம் பெரிதாகி வரும் சூழலில் உங்கள் பெயர் இதில் அடிப்பட காரணம் என்ன?

ஜான் பாண்டியன்: புதிய தமிழகம் கட்சியினர் எனது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக என் பெயரை தொடர்புப்படுத்தினார்கள். அதன் பிறகு ஒரு சில யூடியூபர்கள் தங்களுக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக எனது பெயரை களங்கப்படுத்துகின்றனர். அது வைரல் ஆகிவிட்டது. இதுதான் உண்மை.

கேள்வி: ரஞ்சன் குமார் உங்களை சந்தித்தாரா?

ஜான் பாண்டியன்: இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசியல் பிரமுகர் மூலமாக ரஞ்சன் குமார் என்னை சந்திக்க வந்தார். நான் இல்லை என்று மறுக்கவில்லை. அப்போது ஜெம் வீரமணியின் குடும்பப் பிரச்சனையை முடித்துதர வேண்டும் என்றார். தாஜ் ஹோட்டலில் வைத்து சந்தித்தோம். சாந்தி என்ற பெண்ணையும் ரஞ்சன்குமார் அழைத்து வந்தார். இருவரும் ஒன்றாகத்தான் வந்தனர். வந்ததும் ஜெம் வீரமணியை மிரட்டி 20 கோடி ரூபாய் பெற்றுத்தரும்படி கூறினார்கள்.

நான் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டு கோபத்தோடு கிளம்பிவிட்டேன். அதற்குப் பின்பு எனக்கும் அவருக்கும் எந்த பேச்சுவார்த்தை கிடையாது; எந்த தொடர்பும் கிடையாது. இப்போது ஏன் அவர் என் பெயரை பயன்படுத்துகிறார் என்று தெரியவில்லை.

கேள்வி: என்ன காரணத்துக்காக ஜெம் வீரமணியை மிரட்டி பணம் வங்கித் தர சொன்னார்கள்?

ஜான் பாண்டியன்: சாந்தியும் ஜெம் வீரமணியும் குடும்பம் நடத்தினார்கள். இப்போது அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது. அவர்களை சேர்த்து வைக்க முடியாது. எனவே ஜெம் வீரமணியிடம் பணம் வாங்கி கொடுங்கள். சாந்தி ஒதுங்கி விடுவார் என்று கூறினார். வேறு எதுவும் பேசவில்லை.

கேள்வி: நீங்கள் ரஞ்சன் குமாரை சந்தித்தபோது ஜெம் வீரமணி, சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஜான் பாண்டியன்: நான் ரஞ்சன்குமாரை சந்தித்தபோது, ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது எனக்கு தெரியாது. ஆனால், சாந்தியின் வீட்டிற்கு சென்று டிவியில் வீடியோவை ஒளிபரப்பி கிளிப் எடுத்து வந்ததாக ரஞ்சன் குமாரே கூறுகிறார். எனவே அவர் நேர்மையானவராக இருந்திருந்தால், அப்போதே இந்த விவகாரத்தை மீடியாவில் கொடுத்திருக்கலாம். ஏன் கொடுக்கவில்லை? எனது அரசியலை களங்கப்படுத்த வேண்டும்; ஜான் பாண்டியன் பெயரை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவதாக நான் நினைக்கிறேன்.

கேள்வி: ரஞ்சன்குமார் திடீரென உங்களை இந்த விவகாரத்தில் இணைத்து பேசுவது ஏன்?

ஜான் பாண்டியன்: ரஞ்சன் குமார் இடைத்தரகர் வேலை பார்ப்பதால் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள என் பெயரை பயன்படுத்துவதாக நினைக்கிறேன்.

கேள்வி: ஜெம் வீரமணி அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் விவகாரத்தை ஒரு அரசியல் தலைவராக எப்படி பார்க்கிறீர்கள்?

ஜான் பாண்டியன்: எந்த சிறுமியாக இருந்தாலும் தவறு தவறுதான். இது உண்மையா, பொய்யா என்பதை காவல்துறை விசாரிக்க வேண்டும். போக்சா வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. தேவையில்லாமல் சில யூடியூபர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுக்கிறார்கள். குறிப்பாக, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

கேள்வி: வீரமணி கைது செய்யப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜான்பாண்டியன்: ஜெம் வீரமணி அல்ல சாந்தி அல்ல யார் தவறு செய்தாலும் தண்டனைக்குரியவர்களே.

கேள்வி: ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக காவல் துறை உங்களிடம் எதுவும் பேசினார்களா?

ஜான் பாண்டியன்: காவல்துறை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானும் காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கை சுத்தமாக இருக்கிறது. எனது கட்சியை டேமேஜ் செய்ததற்காக சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளோம்.

சில தினங்களுக்கு முன்பு ஜெம் வீரமணி விவகாரத்தில், ஜான் பாண்டியனுக்கு தொடர்பு இருப்பதாக சில யூடிபர்கள் கூறிவந்த நிலையில், ரஞ்சன் குமார் நேரடியாக ஜான்பாண்டியனை குற்றம் சாட்டியுள்ளார். அதே சமயம் இவ்விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், அரசியல் பகை காரணமாக புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.