📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 08, 2026 03:30 PM

IND vs AFG: அப்பாவி ஆப்கானிஸ்தான் வீரர் மீது ஆத்திரமடைந்து கத்திய சிராஜ்.. என்ன நடந்தது?

IND vs AFG: அப்பாவி ஆப்கானிஸ்தான் வீரர் மீது ஆத்திரமடைந்து கத்திய சிராஜ்.. என்ன நடந்தது?

IND vs AFG: அப்பாவி ஆப்கானிஸ்தான் வீரர் மீது ஆத்திரமடைந்து கத்திய சிராஜ்.. என்ன நடந்தது?

சண்டிகர்: முல்லன்பூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பந்தை தடுத்து ஆடும் மந்தமான உத்தியால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கடும் ஆத்திரமடைந்தார். ஆப்கானிஸ்தான் அணி மோசமாக பேட்டிங் ஆடிய நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் 3வது நாளில் ஆப்கானிஸ்தான் வீரர் ஷராபுதீன் அஷ்ரப் காயம் காரணமாக ரன் ஓட முடியாமல் தவித்தார். இதனால் அவருடன் களத்தில் நிலைத்து நின்ற ரஹ்மத் ஷாவாலும் ரன் ஓட முடியவில்லை. பவுண்டரிகளும் அடிக்காமல், ரன் எடுக்கவும் முற்படாமல் பந்துகளைத் தடுத்து ஆடுவதிலேயே அவர்கள் முழு கவனம் செலுத்தினர். இந்த மந்தமான ஆட்டத்தைப் பார்த்த சிராஜ் பொறுமையிழந்து ஆத்திரமடைந்தார்.

பந்தை தடுத்து ஆடிய ரஹ்மத் ஷாவை நோக்கிச் சென்ற சிராஜ், கையை நீட்டி மைதானத்திலேயே தனது அதிருப்தியைக் கடுமையாக வெளிப்படுத்தினார். சிராஜ் கோபமாகப் பேசியதற்கு ரஹ்மத் ஷா புன்னகையுடன் மட்டுமே பதிலளித்தார்.

சிராஜின் இந்தச் செயலுக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான கிரேம் ஸ்வான் மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். வர்ணனையின் போது பேசிய ஸ்வான், இன்னும் 250 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், ரன் எடுக்காமல் பந்தை தடுத்துக் கொண்டே இருந்தால் எந்தப் பந்துவீச்சாளருக்கும் கோபம் வரும் என்றும், காயமடைந்த வீரரை வெளியே அனுப்பிவிட்டு விளையாடக்கூடிய வீரரை ஆப்கானிஸ்தான் களமிறக்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார். சிராஜின் கோபத்தில் நியாயம் உள்ளது என்று அவர் தெரிவித்தார். அதே வேளையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஓய்வறையில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்ததும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் 126 ரன்களும், கே.எல். ராகுல் 100 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி, மீண்டும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 112 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.