IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு 5 ரன்கள் அபராதம்..சதம் அடித்த கேப்டன்..இந்தியாவுக்கு 219 ரன்கள் இலக்கு
IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு 5 ரன்கள் அபராதம்..சதம் அடித்த கேப்டன்..இந்தியாவுக்கு 219 ரன்கள் இலக்கு
சென்னை: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சென்னையின் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த வானிலைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினார்.
கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் உடல் சோர்வுக்கு இடையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாஹிதி, ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை எட்டினார். அவர் 130 பந்துகளில் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சு
இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆதிக்கம் செலுத்தினார். ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசையை சீர்குலைத்த அவர், 8.2 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டாக சதமடித்திருந்த ஷாஹிதியை, ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுக்கச் செய்து ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸிற்கு பிரசித் கிருஷ்ணா முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 5 ரன்கள் அபராதம்
ஆட்டத்தின் போது ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி ரன் ஓடும்போது பிட்ச்சின் நடுவே உள்ள அபாயகரமான பகுதிக்குள் (Danger Area) ஓடினார். இதுகுறித்து நடுவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், மீண்டும் அதே தவறை அவர் செய்ததால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் எடுத்த ஒரு ரன் ரத்து செய்யப்பட்டதுடன், ஆப்கானிஸ்தான் மொத்த ரன்களில் இருந்தும் குறைக்கப்பட்டது.
ஒன்றன்பின் ஒன்றாக சரிந்த விக்கெட்டுகள்
ஆப்கானிஸ்தான் அணியின் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடி வீரர் ரஷித் கான் 4 ரன்களில் ஹர்ஷ் துபே பந்துவீச்சில் பிரின்ஸ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ஏ.எம். கசன்பர் மற்றும் ஃபரீத் அகமது ஆகியோர் தவறான புரிதலால் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 218 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி இந்த இலக்கை நோக்கி தங்களது பேட்டிங்கைத் தொடங்கவுள்ளது.