📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 13, 2026 08:30 PM

IND vs AFG: இந்தியாவுக்கு மெகா இலக்கு நிர்ணயம் செய்த ஆப்கானிஸ்தான்.. குர்பாஸ் 51 பந்தில் 102 ரன்!

IND vs AFG: இந்தியாவுக்கு மெகா இலக்கு நிர்ணயம் செய்த ஆப்கானிஸ்தான்.. குர்பாஸ் 51 பந்தில் 102 ரன்!

IND vs AFG: இந்தியாவுக்கு மெகா இலக்கு நிர்ணயம் செய்த ஆப்கானிஸ்தான்.. குர்பாஸ் 51 பந்தில் 102 ரன்!

தர்மசாலா: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரஹ்மானுல்லா குர்பாஸின் அதிரடி சதத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அணி 194 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக பந்துவீச்சாளர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

மழையால் தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் தனது முதல் ஓவரிலேயே இப்ராகிம் சத்ரானை (1) அவுட் செய்து தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த செடிகுல்லா அடல் (0) மற்றும் ரஹ்மத் ஷா (3) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆனால், மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியுடன் (27) இணைந்து 4வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார். அசுர வேகத்தில் ரன் குவித்த குர்பாஸ், வெறும் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உட்பட 102 ரன்கள் குவித்து சதம் விளாசினார்.

குர்பாஸ்-ஐ அவுட்டாக்க கிடைத்த ஒரு வாய்ப்பை கேப்டன் சுப்மன் கில் ரிவ்யூ கேட்காமல் வீணடித்தார். அது இந்திய அணிக்கே வினையாக மாறியது. பின்னர் ஆப்கானிஸ்தான் அணி வலுவான ஸ்கோரை நோக்கிச் சென்ற போது, நிதிஷ் குமார் ரெட்டி வீசிய பந்தில் குர்பாஸ் போல்டானார். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் அணி மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்தது.

நடுவரிசையில் அஸ்மதுல்லா உமர்சாய் 26 ரன்கள் (3 சிக்சர்கள்) எடுத்தார். ரஷீத் கான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 24.5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய குர்னூர் பிரார் 4.5 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மற்றொரு அறிமுக ஸ்பின்னரான ஹர்ஷ் துபே 5 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 25 ஓவர்களில் 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.