IND vs AFG டெஸ்ட் போட்டியில் மெகா சாதனையை செய்யப் போகும் ரிஷப் பண்ட்.. இன்னும் எத்தனை 6 அடிக்கணும்?
IND vs AFG டெஸ்ட் போட்டியில் மெகா சாதனையை செய்யப் போகும் ரிஷப் பண்ட்.. இன்னும் எத்தனை 6 அடிக்கணும்?
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் 6 அன்று தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய உலக சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திரா சிங் சர்வதேச மைதானத்தில் நாளை (ஜூன் 6) தொடங்க உள்ளது.
இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் 6 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதில் வல்லவரான ரிஷப் பண்ட், கார் விபத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் சராசரியாகவே ஆடி வருகிறார்.
மேலும், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியையும் இழந்து இருக்கிறார். எனவே, தன்னை நிரூபிக்கும் வகையில் இந்தப் போட்டியில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு அவர் சிக்சர்களைப் பறக்கவிடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க் கின்றனர்.
தற்போது ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் 94 சிக்சர்களுடன் இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இன்னும் 6 சிக்சர்கள் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடித்த உலகின் 4-வது பேட்ஸ்மேன் என்ற அரிய மைல்கல்லை அவர் எட்டுவார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்திய அவர், 14 போட்டிகளில் விளையாடி 138.05 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 312 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது தலைமையிலான லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்து தொடரிலிருந்து மிக விரைவாக வெளியேறியது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறந்து, புதிய உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் களம் இறங்க பண்ட் தயாராகி வருகிறார்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.