இங்கிலாந்து வேண்டாம்.. ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட போகும் பென் ஸ்டோக்ஸ்? கதவை திறக்குமா பிசிசிஐ
இங்கிலாந்து வேண்டாம்.. ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட போகும் பென் ஸ்டோக்ஸ்? கதவை திறக்குமா பிசிசிஐ
மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், நட்சத்திர ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளின்படி, 35 வயதான அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த பென் ஸ்டோக்ஸ், இதற்கு முன்பு 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடியிருந்தார். அப்போது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக களம் இறங்கிய அவர், நான்கு போட்டிகளில் விளையாடி 128 ரன்களை எடுத்ததுடன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
அதற்குப் பிறகு, வரும் 2026-27 சீசனில் அவர் மீண்டும் இத்தொடரில் பங்கேற்கவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2025-26 பிக் பாஷ் லீக் சீசனில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடிய அவர் 202 ரன்களைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸ்க்கு தற்போது சர்வதேச கிரக்கெட் விளையாட வேண்டும் என்ற நிலை இல்லாத போது, அவருக்கு அதிக காலம் மற்ற கிரிக்கெட்டில் விளையாட நேரம் இருக்கும். இதனால், அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாட வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனினும் பென் ஸ்டோக்ஸ்க்கு தடையாக ஐபிஎல் விதி ஒன்று இருக்கிறது.
அதன் படி, ஸ்டோக்ஸ் மெகா ஏலத்தின் போது தனது பெயரை ரிஜஸ்டர் செய்யாமல் விட்டதால், அவர் மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. இதனால் 2028 மெகா ஏலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றதால், அவருக்கு பிசிசிஐ சிறப்பு அனுமதி தரலாம். இந்த சூழலில் ஸ்டோக்ஸ் போன்ற வீரரை உலகம் முழுவதும் உள்ள லீக் தொடரில் வினைளயாட வைக்கலாம் என்பதால், அவரை வாங்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் நிர்வாகம் ஆர்வம் காட்டலாம்.