📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 12:04 PM

இனி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு

இனி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு

இனி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக முதல் கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது என சபநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Published : August 12, 2026 at 7:44 AM IST

சென்னை: வரும் 17ஆம் தேதி முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி வரை சுமார் 21 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். சட்டப்பேரவை தொடங்கிய முதல் நாளான 5ஆம் தேதியன்று நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், அதனைத் தொடர்ந்து, ஆக. 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

பொதுவாக சட்டப்பேரவையானது காலை 9.30 மணிக்கு துவங்கி, மதியம் 1:30 மணிக்கு முடிவடையும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக மாலை வரை தொடர்ந்து நீடிக்கிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக முதல் கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது நடைபெற்று வரும் விவாதங்களில் குறுக்கீடுகள் அதிகரித்து வருகிறது. உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளைத் தவிர்த்து, அவையின் நேரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். எனவே நேரத்தை முறைப்படுத்தும் நோக்கில் வரும் 17ஆம் தேதி முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என அறிவித்தார். தொடர்ந்து, 10 நிமிடங்கள் நிறைவடைந்ததும், அடுத்த உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இதற்காக உறுப்பினர்கள் யாரும் சங்கடப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொகுதி பிரச்சினைகளை உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக அளித்தால், அவற்றை அவையில் பதிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவை நடவடிக்கைகள் முடிந்து உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு முன்பாகவே, தங்களது தொகுதி தொடர்பான பிரச்சினைகளைப் பதிவு செய்து பெற்றுக்கொண்டு, அவற்றைத் தொகுதியில் மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும்” என்றும் அவர் கூறினார்.