📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 10, 2026 06:01 PM

இனி தனுஷ் vs விஜய்...? தமிழக அரசியலில் புதிய திருப்பமா ?

இனி தனுஷ் vs விஜய்...? தமிழக அரசியலில் புதிய திருப்பமா ?

இனி தனுஷ் vs விஜய்...? தமிழக அரசியலில் புதிய திருப்பமா ?

எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருப்பதாகவும், தனுஷ் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வரும்போது, தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும் என்றும், பிரதான ஜோதிடர் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார்.

பிரபல ஜோதிடராக திகழ்ந்து வரும் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்களுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து, அவருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவராக இருந்தவர். அதேபோல், முதலமைச்சர் விஜய்யுடனும் நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து வருபவர். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, இவரது ஜோதிடக் கணிப்பு உலகம் முழுவதும் பேசுபொருளானது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்பாகவே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்தித்த ரத்தன் பண்டிட், அவருக்கு வெற்றி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ரத்தன் பண்டிட்டின் ஜோதிடத் திறன் உலகளவில் கவனம் பெற்றதுடன், அவரது கணிப்பும் பரவலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட அவர் பேசும்போது, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்த தனது நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தினார். மேலும், அரசியலில் யார் யாரெல்லாம் சாதிப்பார்கள், யாரெல்லாம் ஜொலிக்க மாட்டார்கள் என்பது குறித்தும் தனது கணிப்பை அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி யோகம் இல்லை எனவும், விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால், உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும் என்றும், ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் முதலமைச்சராகும் யோகம் இல்லை என்றும், இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர் முதலமைச்சர் விஜய்தான் என்றும் ரத்தன் பண்டிட் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருப்பதாகவும், தனுஷ் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வரும்போது, தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும் என்றும், அதுவரை தமிழக முதலமைச்சர் விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி இருக்காது என்றும், தனுஷின் அரசியல் வருகைக்குப் பிறகே தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்லும் என்றும் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் கையில் கட்டப்பட்டிருக்கும் சிவப்பு கயிறு, முருகப்பெருமானின் அருளின் அடையாளம் என்றும், அந்த சிவப்பு கயிறு வெற்றியையும் உயர்வையும் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். முருகனின் அருளால் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும், அவர் தேர்ந்தெடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமையும் என்றும் ரத்தன் பண்டிட் கூறினார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தை சட்டமன்றத் தொகுதிகள் சார்ந்து விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை சமீபத்திய அறிவிப்பு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனுஷ் அரசியல் களத்தில் ஆழம் பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா நிகழ்வில், "சும்மா வந்தோம், என்னுடன் புகைப்படம் எடுத்தோம் என இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்" என்று தனுஷ் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்துள்ள இந்தக் கருத்துகள், சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.