📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 17, 2026 11:33 AM

இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனில் ஓப்பன்! வீட்டிலிருந்தபடியே விவரங்களை எளிதாகப் பதிவு செய்வது எப்படி?

இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனில் ஓப்பன்! வீட்டிலிருந்தபடியே விவரங்களை எளிதாகப் பதிவு செய்வது எப்படி?

இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆன்லைனில் ஓப்பன்! வீட்டிலிருந்தபடியே விவரங்களை எளிதாகப் பதிவு செய்வது எப்படி?

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளும் 'சுய கணக்கெடுப்பு'வசதி இன்று முதல் ஜூலை 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தங்களின் தகவல்களை நேரடியாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு முக்கியக் கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். தமிழ்நாட்டில் இந்த முதற்கட்டம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நேரடியாக நடைபெற உள்ளது. இதில் வீடுகளின் தரம், குடிநீர், சுகாதாரம், மின்சாரம் மற்றும் சொத்துக்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்டம்

இதனைத் தொடர்ந்து, 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் முறைப்படி தொடங்கப்படும்.

இந்த இரண்டாம் கட்டப் பணியின் போது, குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதி, அவர்கள் செய்து வரும் தொழில், இடம்பெயர்வு காரணங்கள் மற்றும் சாதிவாரி விவரங்கள் உள்ளிட்ட மிக முக்கிய சமூக-பொருளாதாரத் தரவுகள் விரிவாக சேகரிக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்த சுய கணக்கெடுப்பில் எளிதாக பங்கேற்கலாம்.

இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் தங்களின் மாநிலத்தை தேர்வு செய்து, திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டை (Captcha) சரியாக உள்ளிட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, குடும்பத் தலைவரின் பெயரைப் பதிவிட வேண்டும்.

இதற்கு அதிகாரப்பூர்வ வரையறை ஏதும் இல்லை என்பதால், குடும்பத்தினர் யாரை வேண்டுமானாலும் தலைவராகப் பதிவு செய்யலாம்.

ஆனால், ஒருமுறை பதிவிட்ட பெயரைப் பின்னர் மாற்ற இயலாது என்பதால் கவனத்துடன் உள்ளிட வேண்டும்.

இறுதியாக, குடும்ப உறுப்பினரின் கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்; ஒரு குடும்பத்திற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன்லைன் சுய கணக்கெடுப்புப் படிவத்தில் வீட்டின் அமைப்பு, கட்டிட எண், சுவர்கள் மற்றும் கூரைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வீட்டின் உரிமை நிலை, அறைகளின் எண்ணிக்கை மற்றும் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட வசதிகள் குறித்த 33 முக்கியக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

விபரங்களை வெற்றிகரமாகச் சமர்ப்பித்தவுடன், பயனாளர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வழியாக ஒரு Self-Enumeration ID அனுப்பப்படும்.

பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வரும்போது, இந்த ஐடியைக் காண்பித்தால் போதுமானது.