கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் இத்தனை பேரா? சென்னையே வெறிச்சோடி போயிருச்சே!
கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் இத்தனை பேரா? சென்னையே வெறிச்சோடி போயிருச்சே!
"அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் 'பெர்மிட்' ரத்து செய்யப்படும்" என அமைச்சர் எச்சரித்தார்.
Published : September 14, 2026 at 11:03 PM IST
சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டி, கடந்த மூன்றே நாட்களில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 270 பேர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்துக்கு இன்று வந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள ஏராளமானோர் சென்னை திரும்பும் போது, அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் தவிர்ப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளின் வசதிகளுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர் விரிவாக கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசினார். அவர் கூறுகையில், "கடந்த மூன்று நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 3,297 பேருந்துகளுடன் கூடுதலாக 2,915 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 6,212 இயக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து கடந்த மூன்று நாட்களில் 2,48,270 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இங்கிருந்து சென்றவர்களை கணக்கெடுத்து சென்னை திரும்புவதற்கு வசதியாக கலந்தாலோசனை செய்து அதற்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று வழக்கமாக இயக்கப்படும் 1,099 பேருந்துகளுடன் 2,240 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,339 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை (செப்.15) அன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 5,763 பேருந்துகள் இயக்கப்டவுள்ளன" என அவர் கூறினார்.
"அமைச்சரை காணவில்லையா?"
கிளாம்பாக்கத்தில் கடந்த மூன்று நாட்களாக பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் அவதியுற்றனர். இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சரை காணவில்லை என சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.
இதுதொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து மக்கள் பிரச்சனைகளை சரி செய்து வந்தோம். பொய் பிரச்சாரங்களை செய்யக்கூடாது. அந்த பிரச்சாரங்கள் எல்லாம் முறியடிக்கப்பட்டு உள்ளது.
எங்களுடைய அதிகாரிகள் அனைவரும் இங்கு தான் இருந்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து நான் அனைத்தையும் கண்காணித்து வந்தேன். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டுமானால், ஓடிபி எண்ணை வைத்து தான் கேன்சல் செய்ய முடியும். அப்படி இதுவரை ஏதும் நடைபெறவில்லை. அது பொய்யான தகவல்.
பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூல் செய்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி, கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் 'பெர்மிட்' கேன்சல் செய்யப்படும்" என அமைச்சர் எச்சரித்தார்.