இந்த ஆண்டு ஆடி கிருத்திகைக்கு அப்படி என்ன சிறப்பு? 12 ஆண்டுக்கு பிறகு நிகழும் அதிசயம் குறித்து ஜோதிடர் கூறுவது என்ன?
இந்த ஆண்டு ஆடி கிருத்திகைக்கு அப்படி என்ன சிறப்பு? 12 ஆண்டுக்கு பிறகு நிகழும் அதிசயம் குறித்து ஜோதிடர் கூறுவது என்ன?
இந்த ஆடி மாதத்தில் இரண்டு நாட்கள் கார்த்திகை நட்சத்திரம் தொடர்வதால் என்று முருகனை வழிபட்டால் அதிக பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
Published : July 25, 2026 at 6:30 AM IST
ஆடி மாத சிறப்புகள்
தமிழ் மாதங்களின் வரிசையில் மற்ற மாதங்களை விடவும் மிகவும் மங்களகரமான மாதமாக அனைவராலும் கொண்டாடப்படு்வது ஆடி மாதமாகும். இந்த ஆடி மாதத்தில் தமிழகம் முழுவதும் அம்மன் கோவில் திருவிழாக்களும், செவ்வாய், வெள்ளி வழிபாடுகளும் மிகவும் பிரசித்தி பெற்று காணப்படுகிறது.
“ஆடி வெள்ளி கிழமையிலே ஆத்தா உன் கோவிலிலே...” போன்ற பாடல்கள் பெண்களின் பக்தியினை இருமடங்காக்கும் சக்தி கொண்டது. இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊத்துதல், தீமித்தல் போன்ற அம்மனுக்கான சிறப்பு வழிபாடுகளில் மக்கள் அதிகமாக ஈடுபடுவார்கள்.
ஆடி மாதம் என்றால் அம்மன் வழிபாடு மட்டும்தான் சிறப்பா என்றால் இல்லை, ஆடி மாதத்தில் வரும் அம்மாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்கள் நமது முன்னோர்களின் வழிபாட்டிற்கு ஏற்ற நாட்களாக கருதப்படுகிறது. இந்த நாட்களில், நமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கான வழிபாடுகளில் பலர் ஈடுபடுவார்கள்.
இப்படிப்பட்ட ஆடி மாதம் மற்றொரு முக்கிய கடவுளின் வழிபாட்டிற்கும் முக்கியமான மாதமாகும். “தமிழ் கடவுள்” என்று பக்தர்களால் அழைக்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த மாதமாகவும் இந்த ஆடி மாதம் திகழ்கிறது.
முருகனுக்கு ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் என்று நீண்டு கொண்டே செல்லும் இந்த வரிசையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று “ஆடி கிருத்திகை” திருவிழா.
முருகக் கடவுள் பிறந்த நட்சத்திரம் கார்த்திகை. அதனால், முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரமும் விஷேசமானது தான், அதிலும் ஆடி மாதம் வரும் கார்த்திக்கை நட்சத்திரம் கூடுதல் விஷேசமானது.
கார்த்திகை என்ற பெயர்தான் காலப்போக்கில் மறுவி “கிருத்திகை” என்று மாறியது. முருகனுக்கான திருவிழா நாட்களில் பக்தர்கள் அவரை நினைத்து விரதம் இருப்பது தான் சிறப்பம்சமாக இருக்கும். கந்த சஷ்டி விரதம் பற்றி அனைவரும் நன்கு அறிந்திருப்போம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் கந்த சஷ்டி நாட்களில் விரதம் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல், முருகனின் நட்சத்திர நாளான கார்த்திகையும், தமிழ் மாதத்தின் மங்களகரமான மாதமான ஆடி மாதமும் சேர்ந்த “ஆடி கிருத்திகை” திருநாளில் முருகனை நினைத்து மனமார விரதம் மேற்கொள்பவர்கள் வேண்டியதை முருகப்பெருமான் கொடுப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி கிருத்திகை நாளை பக்தர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனிடையே, இந்த ஆண்டு ஆடி கிருத்திகை இரண்டு நாட்கள் வருவதால் பக்தர்கள் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த ஆடி மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதாவது ஆங்கில மாத கணக்கின்படி பார்த்தால், ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6.18 மணிக்கு தொடங்கும் கார்த்திகை நட்சத்திரமானது, அடுத்தநாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 4.51 மணி வரை வருகிறது. ஆடி கிருத்திகை இரண்டு நாட்கள் தொடர்வதால், ஆகஸ்ட் 6ஆம் தேதி முருகனை வழிபாடு செய்வதா? ஆகஸ்ட் 7ஆம் தேதி முருகனை வழிபாடு செய்வதா? என்று பக்தர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்ரமணியனை ஈடிவி பாரத் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். ஆடி கிருத்திகை தொடர்பான குழப்பம் குறித்து ஜோதிடர் கூறியபோது, “பஞ்சாங்கப்படி சூரிய உதயம் ஆன பின்பு தான் வழிபாடு மற்றும் விரதங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி கிருத்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை தொடங்கினாலும், மறுநாள் சூரிய உதயம் ஆரம்பமான பின்பு தான் முருகன் வழிபாட்டிற்கான விரதங்களை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும், ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை வரை கார்த்திகை நட்சத்திரம் வருவதால் அன்று “ஆடி கிருத்திகை”-கான வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதே சிறந்தது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை அன்று சந்திரன் உச்சத்தில் இருப்பார். ஆனால் இந்த முறை 12 ஆண்டுகளுக்கு பிறகு அன்று குருவும் உச்சத்தில் இருக்கிறார். எனவே இந்தாண்டு வரும் ஆடி கிருத்திகை கூடுதல் விஷேசமாக கருதப்படுகிறது.
இந்த ஆடி கிருத்திகை திருநாளில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனுக்கு தேனும் தினை மாவும் படையல் வைத்து வழிபட்டால், அவர்களது வேண்டுதல்கள் உடனடியாக நடக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பொதுவாகவே, முருகனை மலை ஏறி வணங்கினால் எதிரிகள் ஒடுக்கப்படுவதாக ஐதீகம் உள்ளது. இந்த கிருத்திகை திருநாளில் மலைமேல் இருக்கும் முருகனை வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.