இந்திய அணி தடுமாற்றம்: கோலி, ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம்
கார்டிப்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, இந்திய அணி 233 ரன் மட்டும் எடுத்தது. விராத் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்தனர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. கார்டிப் நகரின் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் 2வது போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கே.எல். ராகுல் நீக்கப்பட்டு, இஷான் கிஷான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து 'லெவன்' அணியில் ஜோஷ் டங், லியாம் டாசனுக்கு பதிலாக சாகிப் மஹ்மூத், அட்கின்சன் இடம் பிடித்தனர். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜோப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத் ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்தார் சுப்மன். முதல் விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்த போது அட்கின்சன் 'வேகத்தில்' சுப்மன் கில் (31) வெளியேறினார். ஆர்ச்சர் பந்தை பவுண்டரிக்கு அனுப்தி, தனது ரன் கணக்கை துவக்கிய விராத் கோலி, அட்கின்சன் வீசிய 10வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். அட்கின்சன் பந்தில் ஒரு சிக்சர் விளாசிய ரோகித் (26), வில் ஜாக்ஸ் 'சுழலில்' சிக்கினார். சாம் கர்ரான் பந்தில் இஷான் கிஷான் (1) அவுட்டானார்.
இரண்டு அரைசதம்: பின் இணைந்த கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி நம்பிக்கை தந்தது. சாம் கர்ரான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, ஒருநாள் போட்டியில் தனது 78வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஷ்ரேயஸ் ஐயர், அடில் ரஷித் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். நான்காவது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது ஆர்ச்சர் பந்தில் கோலி (65 ரன், 8X4) அவுட்டானார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (2) ஏமாற்றினார். ஆர்ச்சர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஷ்ரேயஸ், 42 பந்தில் அரைசதம் எட்டினார்.
ஆர்ச்சர் வீசிய 37வது ஓவரில் அக்சர் படேல் (1), ஷிவம் துபே (0) அவுட்டாகினர். குர்னுார் பிரார் (7) நிலைக்கவில்லை. அடுத்து வந்த பும்ரா, சாகிப் மஹ்மூத் வீசிய 43வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச 18 ரன் கிடைத்தது. அட்கின்சன் வீசிய 44வது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயர் (66 ரன், 2X6, 5X4), பிரசித் கிருஷ்ணா (0) வெளியேறினர்.
இந்திய அணி 44 ஓவரில் 233 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பும்ரா (20) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர், அட்கின்சன் தலா 3, சாகிப் மஹ்மூத் 2 விக்கெட் கைப்பற்றினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் (0), பெத்தல் (4) ஏமாற்றினர். கேப்டன் புரூக் (16), சாம் கர்ரான் (26), பட்லர் (17) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜோ ரூட் அரைசதம் கடந்தார்.
இங்கிலாந்து அணி 33 ஓவரில் 157/5 ரன் எடுத்திருந்தது. ரூட் (72), ஜாக்ஸ் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.