📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka June 05, 2026 08:00 AM

இந்திய ஈட்டி எறிதல் ஜாம்பவான் நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர் ருமேஷ் பதிராஜே

இந்திய ஈட்டி எறிதல் ஜாம்பவான் நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர் ருமேஷ் பதிராஜே

இந்திய ஈட்டி எறிதல் ஜாம்பவான் நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர் ருமேஷ் பதிராஜே

ரோம்: ரோம் டைமண்ட் லீக் 2026 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் 23 வயது இளம் வீரர் ருமேஷ் பதிராஜே 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ராவின் சிறந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

நேற்று (ஜூன் 4) நடைபெற்ற இப்போட்டியில் ருமேஷ் பதிராஜே இந்த சாதனையை செய்தார். அவர் 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த ஆண்டு ஈட்டி எறிதலில் உலக அளவில் மிகச் சிறந்த தூரத்தை பதிவு செய்தார். மேலும், இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகவும், புதிய தொடர் சாதனையாகவும் அமைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே நாட்டின் ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் படைத்திருந்த 90.34 மீட்டர் சாதனையை ருமேஷ் பதிராஜே தற்போது தகர்த்துள்ளார்.

இலங்கை வீரரின் இந்த சாதனை ஆசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 2025 தோஹா டைமண்ட் லீக் தொடரில் எறிந்த தனது சிறந்த சாதனையான 90.23 மீட்டரை விட ருமேஷ் பதிராஜே அதிக தூரம் எறிந்துள்ளார். இதன் மூலம் ஆசிய வரலாற்றில் இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக பாகிஸ்தானின் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் (92.97 மீட்டர், பாரிஸ் ஒலிம்பிக் 2024) மட்டுமே முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆசிய ஈட்டி எறிதல் பிரிவில், தற்போது இலங்கையின் ருமேஷ் பதிராஜே புதிய சவாலாக உருவெடுத்துள்ளார். ரோம் போட்டியில் 2025 உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற கர்டிஸ் தாம்சன், ஆண்டர்சன் பீட்டர்ஸ் போன்ற முன்னணி வீரர்களுக்கு எதிராக ருமேஷ் பதிராஜே களம் இறங்கினார். தனது முதல் முயற்சியில் 84.49 மீட்டர் எறிந்த அவர், இரண்டாவது முயற்சியில் 92.62 மீட்டர் எறிந்து அசத்தலான வெற்றியைப் பெற்றார்.

நடப்பு 2026 சீசனில் ருமேஷ் பதிராஜேவின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற அவர், மார்ச் மாதம் தியகாமாவில் நடைபெற்ற போட்டியில் 89.37 மீட்டர் எறிந்து இலங்கையின் தேசிய சாதனையை படைத்தார். பின்னர் நைரோபியில் 89.28 மீட்டர் எறிந்து அசத்தினார்.

கடந்த மே 31 அன்று நடைபெற்ற ரபாத் டைமண்ட் லீக் போட்டியில் 85.97 மீட்டர் எறிந்து இரண்டாவது இடம்பிடித்த அவர், அதற்கு அடுத்த நான்காவது நாளில் ரோம் நகரில் 90 மீட்டர் எல்லையைத் தாண்டி 92.62 மீட்டர் எறிந்து உலக அரங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.