இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் நியமனம்!
இதற்கு முன் சுபதீப் கோஷ் இந்திய ஏ அணி, இந்தியா அண்டர் 19 அணி மற்றும் இந்திய மகளிர் அணி ஆகியவற்றுக்கும் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.
Published : August 3, 2026 at 9:08 PM IST
ஹைதராபாத்: இந்திய அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக, அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீரர் சுபதீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி இந்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி கொழும்பிலுள்ள சிங்கள்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரையான் டென் டோஸ்கேட் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோரின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தற்போது காலியாக உள்ள இந்த இடங்களுக்குப் புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் புதிய பயிற்சியாளர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் பிசிசிஐ இணைச் செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்தார். அதன்படி, இந்திய அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக, அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய முன்னாள் வீரர் சுபதீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
A proud moment for Assam Cricket! 👏🏻The Assam Cricket Association extends its heartiest congratulations to Subhadeep Ghosh on his appointment as the Fielding Coach of the Indian Senior Men's Cricket Team.A former Assam and Railways cricketer, Subhadeep has also served as the… pic.twitter.com/hGiWtOtlQq
இந்த அறிவிப்பினை அசாம் கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளது. அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுபதீப் கோஷ், 17 முதல்தரப் போட்டிகள் மற்றும் 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுதவிர, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இவர் பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர் இந்தியா ஏ அணி, இந்திய அண்டர் 19 அணி மற்றும் இந்திய மகளிர் அணி ஆகியவற்றுக்கும் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். இதுதவிர, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2014ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றபோது, அந்த அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார். அதன்பின், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:
இதன் மூலம், இலங்கை டெஸ்ட் தொடர் முதல் சுபதீப் கோஷ் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகச் செயல்படவுள்ளார். இதனால், கௌதம் கம்பீர் - சுபதீப் கோஷ் கூட்டணியில் இந்திய அணியின் ஃபீல்டிங்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.