‘TAPS இருக்கட்டும்; அரசு ஊழியர்களுக்கு அதுவரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துங்க’
‘TAPS இருக்கட்டும்; அரசு ஊழியர்களுக்கு அதுவரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துங்க’ - ஜாக்டாே ஜியோ
TAPS விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து காலந்தாழ்த்தி வருகிறது என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
Published : September 18, 2026 at 11:12 AM IST
சென்னை: TAPS நடைமுறைக்கு வரும் வரை, அரசு ஊழியர்களுக்கான பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை ஜாக்டாே ஜியோ வலியுறுத்தியுள்ளது.
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் ஓய்வூதியத்தில் த.வெ.க அரசு தொடர்ந்து கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.
TAPS வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தாமதம்
முதலில் 2026-27-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் முந்தைய தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு 2026-27 நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 11,000 கோடி முற்றாக வெட்டப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு இனங்களில் ரூ. 3,000 கோடி அளவிற்கு நிதி குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, ரூ. 14,000 கோடி நிதிக் குறைப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வினா எழுப்பினர்.
ஆனால், நிதியமைச்சர் இது தொடர்பான உரிய விளக்கத்தினை அளிக்கவில்லை. ஒரு அரசின் கொள்கை முடிவு என்பது அதன் கொள்கை விளக்கக் குறிப்பால் அறிவிக்கப்படுகிறது. த.வெ.க சார்பாக சட்டமன்றத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக குழு அமைக்கப்பட்டு விரைந்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது முரணாக உள்ளது.
1972 அடிப்படையில் மாற்றங்கள்
மேலும், ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்கள் கடந்த நிலையிலும், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டத்திற்கான விதிமுறைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்காமல் காலந்தாழ்த்தி வருவது ஏற்புடையதல்ல. TAPS திட்டத்திற்கான விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், 1972ன் அடிப்படையில் தான் அமைய வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
TAPS விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதற்கு ஏற்படும் கால தாமத்தினைப் பார்க்கும்போது, TAPS விதிகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள தமிழ்நாடு ஒய்வூதிய விதிகள், 1972க்கு முரணாக இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆனால், கடந்த செப்டம்பர் 11 அன்று அரசுச் செயலாளர், நிதித்துறை வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், 18 ஆண்டுக்குக்கும் குறைவாக பணிபுரிந்து சிபிஎஸ் திட்டத்தில் 1-1-2026க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடைக்கால ஓய்வூதியமான 30 விழுக்காடு என்பது வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் தாழ்த்துவது சரியல்ல
மேலும், அதற்குப் பதிலாக ரூ. 10,000 மட்டுமே இடைக்கால மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், 18 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதலான இடைக்கால ஓய்வூதியமானது 10 மாதத் தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் என்றும் 18 ஆண்டுகளுக்கு மேல் பணிக் காலம் உள்ளோருக்கு 30 விழுக்காடு என்ற இடைக்கால ஓய்வூதியம் நடைமுறைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAPS விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதற்கு தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே காலந்தாழ்த்தி வரும் சூழ்நிலையில், ஏற்கனவே பெற்ற இடைக்கால ஓய்வூதியத்தினை பிடித்தம் செய்வதும் இடைக்கால ஓய்வூதியத்தினை குறைப்பதும் எள்ளவும் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதோடு அதிகார வர்க்கத்தின் இச்செயலுக்கு ஜாக்டோ ஜியோ கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
வரலாற்றில் மைல் கல்
60 வயது அடைந்த அனைவரையும் ஆங்கிலத்தில் சீனியர் சிட்டிசன் என்றும், தமிழில் மூத்த குடிமக்கள் என்று மிகவும் கவுரவாக அழைக்கும் வேளையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய கால பலன்களை TAPS விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவில்லை என்று நிறுத்தி வைத்துக் கொண்டு, இடைக்கால ஒய்வூதியத்திலும் பிடித்தம் செய்வது என்பது முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்காகும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2001-2006 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, வேலை நியமனத் தடைச் சட்டத்தினைக் கொண்டு வந்ததன் மூலமாக, அரசுப் பணிகளில் பணியாளர்கள் நியமனங்கள் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டது. இதற்கு எதிராகவும் ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டதற்கு எதிராகவும் ஜாக்டோ ஜியோ 2003ல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்தியது என்பது அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வரலாற்றில் ஒரு மைல் கல்.
இதன்பின்னர், 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்று, வேலை நியமனத் தடைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, 2007க்குப் பிறகு தான் அரசுப் பணியில் நியமனங்கள் ஏற்பட்டன. 2007க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்து, 1-1-2026ல் 18 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்கள் மிக சொற்ப அளவிலேயே இருப்பார்கள்.
18 ஆண்டுகள் பணிக்காலம் என்பது இடைக்கால ஓய்வூதியத்திற்கே அளவீடாகக் கொள்ளப்படுகிறது என்றால், TAPS திட்டத்திற்கான ஓய்வூதிய கால பலன்களின் அளவீடுகளை தமிழ்நாடு அரசு எவ்வாறு வரையறை செய்ய உள்ளது என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜாேசப் விஜய் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பழைய ஒய்வூதியத் திட்டத்தினை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.