இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத மோசமான சாதனை.. ஜெய்ஸ்வால் செய்த டக் அவுட் ரெக்கார்டு
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத மோசமான சாதனை.. ஜெய்ஸ்வால் செய்த டக் அவுட் ரெக்கார்டு
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி மோசமான வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து 356 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, கே.எல்.ராகுலுடன் இணைந்து ஜெய்ஸ்வால் இந்திய இன்னிங்ஸை தொடங்கினார்.
மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் 6வது பந்திலேயே ஜெய்ஸ்வாலின் தடுப்பாட்டத்தை தகர்த்த பந்து நேராக ஸ்டம்பை பதம் பார்த்தது. 5 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் அவர் வெளியேற, இந்தியா ரன் ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட்டான முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற தேவையற்ற சாதனையை ஜெய்ஸ்வால் செய்துள்ளார்.
ஜெய்ஸ்வால் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் ஒரு முறையும், ஆஸ்திரேலியாவில் 2 முறையும், இங்கிலாந்தில் 2 முறையும் டக் அவுட்டாகியிருந்தார். தற்போது நியூசிலாந்திலும் டக் அவுட் ஆகி வீழ்ந்ததன் மூலம் இந்த 4 நாடுகளிலும் டக் அவுட் பட்டியலில் இடம்பிடித்தார்.
இதற்கு முன் நியூசிலாந்து மண்ணில் இந்திய தொடக்க வீரர்களான டபிள்யூ.வி.ராமன், நவ்ஜோத் சிங் சித்து, பார்த்திவ் படேல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் டக் அவுட்டாகியுள்ளனர். இதில் ராமன் மட்டுமே 2 முறை டக் அவுட்டானவர் ஆவார். இதுவரை 33 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால் 59 இன்னிங்ஸ்களில் தனது 8வது டக் அவுட்டை பதிவு செய்து, முரளி விஜய்யின் 8 டக் அவுட்கள் சாதனையை சமன் செய்தார்.
இந்திய தொடக்க வீரர்களில் அதிக டக் அவுட்டானவர்கள் பட்டியலில் வீரேந்தர் சேவாக் 15 முறையும், பங்கஜ் ராய் 14 முறையும், சுனில் கவாஸ்கர் 11 முறையும், சித்து 9 முறையும் டக் அவுட் ஆகி முதல் நான்கு இடங்களில் உள்ளனர். வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் சதங்களும், வெலிங்டன் முதல் டெஸ்டில் 85 ரன்களும் குவித்த ஜெய்ஸ்வால், கிறைஸ்ட்சர்ச்சில் முதல் ஓவரிலேயே வீழ்ந்தது இந்திய அணிக்கு மோசமான தொடக்கமாக அமைந்தது.