📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 04, 2026 11:01 AM

இந்திய டெஸ்ட் அணிக்கு விழுந்த அடுத்த அடி.. சாய் சுதர்சன் இலங்கை செல்ல மாட்டார்.. என்ன நடந்தது?

இந்திய டெஸ்ட் அணிக்கு விழுந்த அடுத்த அடி.. சாய் சுதர்சன் இலங்கை செல்ல மாட்டார்.. என்ன நடந்தது?

இந்திய டெஸ்ட் அணிக்கு விழுந்த அடுத்த அடி.. சாய் சுதர்சன் இலங்கை செல்ல மாட்டார்.. என்ன நடந்தது?

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 4) கொழும்புக்குப் புறப்படும் நிலையில், தொடக்க வீரரான சாய் சுதர்சன் மற்ற வீரர்களுடன் பயணிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஏற்கனவே முழங்கால் காயத்தால் விலகிய நிலையில், சாய் சுதர்சனும் அணியுடன் பயணிக்காதது இந்திய அணிக்கு மற்றொரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவர் அணியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய அகாடமியில் சாய் சுதர்சன் தனது காயத்திற்கான சிகிச்சை முடிந்து உடற்தகுதி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யத் தொடங்கியிருந்தாலும், இன்னும் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் மும்பையில் இருந்து இன்று பிற்பகலில் கொழும்பு செல்லும் இந்திய அணியுடன் அவர் செல்லவில்லை. அவரது உடற்தகுதியைக் கண்காணித்து வரும் பிசிசிஐ மருத்துவக் குழுவினர், அவர் எப்போது இலங்கைக்குப் பயணிப்பார் என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று கல்லே-வில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 7 முதல் 9 வரை கொழும்பு என்சிசி மைதானத்தில் 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நடைபெற உள்ளது. சாய் சுதர்சன் அதற்குள் உடற்தகுதி பெற்றுவிட்டால், இந்தப் பயிற்சிப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. ஒருவேளை பயிற்சிப் போட்டியைத் தவறவிட்டால், அவர் வலைப்பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.

சமீபத்தில் நடைபெற்ற 'இந்தியா ஏ' இலங்கை சுற்றுப்பயணத்தில், கல்லே-வில் நடைபெற்ற டெஸ்டில் 2 சதங்கள் உட்பட 332 ரன்கள் குவித்து சாய் சுதர்சன் அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் இலங்கையில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கும். ஒருவேளை சாய் சுதர்சன் நீக்கப்பட்டால் மாற்று தொடக்க வீரராக ஒருவரை தேர்வு செய்து அனுப்ப வேண்டி இருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது இந்தியா 4 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 1 டிராவுடன் 5-வது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.