இந்திய விளையாட்டு முகத்தையே மாற்றியது கேலோ இந்தியா.. தேசிய ஹாக்கி பயிற்சியாளர் கிரைக் பெருமிதம்
இந்திய விளையாட்டு முகத்தையே மாற்றியது கேலோ இந்தியா.. தேசிய ஹாக்கி பயிற்சியாளர் கிரைக் பெருமிதம்
டெல்லி: விளையாட்டு என்பது மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது. இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்து, தங்களின் இலக்குகளை அடையவும் அது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதனால்தான், விளையாட்டில் முதலீடு செய்வது என்பது வெறும் பதக்கங்களை வெல்வதற்கும் மேலானது. அது எதிர்காலத் தலைமுறையினருக்கான நல்வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் ஆளுமையை வளர்க்கிறது.
அதனால் தான், கேலோ இந்தியா (Khelo India) திட்டத்தை விரிவுபடுத்தவும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு (National Sports Federations) ஆதரவை வலுப்படுத்தவும் இந்திய அரசு எடுத்துள்ள முடிவு, இந்தத் தொலைநோக்கு பார்வையைப் பிரதிபலிப்பதோடு, இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் தேசக் கட்டமைப்பில் விளையாட்டின் பங்கையும் உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து மைக்கேல் தளத்திற்கு எழுதியுள்ள ஹாக்கி பயிற்சியாளர், இந்தத் திட்டத்தில் என்னைக் கவர்ந்த மிக முக்கியமான விஷயம், பள்ளி விளையாட்டு மைதானங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து ஒலிம்பிக் மேடை வரை, திறமையான ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் தெளிவான பாதையை உருவாக்குவதாகும்.
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒரு தொடக்கம் தேவை. அடுத்த கட்டத்திற்கு எப்படிச் செல்வது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். 'கேலோ இந்தியா ஃபீடர் பள்ளிகள்' (Khelo India Feeder Schools) மற்றும் 'கேலோ இந்தியா உத்கிருஷ்ட வித்யாலயாக்கள்' (Khelo India Utkrishta Vidyalayas) போன்ற புதிய முயற்சிகளுடன், பயிற்சி மையங்களை விரிவுபடுத்துவது, திறமையான இளம் வீரர்கள் பாதையிலேயே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முன்னேற உதவும்.
இந்த முதலீட்டின் அளவு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. ஒரு சிறந்த விளையாட்டு கட்டமைப்பை உருவாக்க நீண்ட கால உழைப்பு தேவை. வசதிகள் முக்கியம்தான், ஆனால் இளம் வீரர்கள் வளரும்போது அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளும் அதே அளவு முக்கியம். சிறந்த பாதைகளை உருவாக்குவது, போட்டிகளை அதிகப்படுத்துவது மற்றும் வீரர்களின் பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவது ஆகியவை எதிர்காலத்தில் சிறந்த வீரர்களை உருவாக்க உதவும்.
திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிவது என்பது முதல் படி மட்டுமே. அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும், தரமான பயிற்சியைப் பெறவும், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவும் நேரம் தேவை. மேம்படுத்தப்பட்ட திறமையாளர்களைக் கண்டறியும் கட்டமைப்புடன் தொடங்கப்பட்டுள்ள 'எமர்ஜிங் கேலோ இந்தியா அத்லெட்ஸ்' (Emerging Khelo India Athletes) திட்டம், இளம் வீரர்கள் சர்வதேச அளவை எட்டும்போது மட்டுமல்லாமல், அவர்களின் ஆரம்பக் காலத்திலிருந்தே முறையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் பெற வழிவகை செய்யும்.
ஒரு பயிற்சியாளராக, 'தேசிய பயிற்சியாளர் அங்கீகார வாரியம்' (National Coach Accreditation Board) அமைக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். விளையாட்டு வீரர்கள் நாட்டின் சார்பில் விளையாடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பயிற்சியாளர்கள் அவர்களின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கிறார்கள். வீரர்களைப் போன்றே பயிற்சியாளர்களையும் மேம்படுத்துவது மிக முக்கியம்; ஏனெனில் சிறந்த பயிற்சியாளர்களே ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையையும் வலுப்படுத்த முடியும்.
இந்தியப் பயிற்சியாளர்களா, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களா என்ற விவாதம் எப்போதும் உண்டு. ஆனால், நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. இந்தியப் பயிற்சியாளர்களுக்கு உள்ளூர் சூழல் நன்றாகத் தெரியும். வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் தங்களின் சர்வதேச அனுபவத்தை கொண்டு வருவார்கள். அனைவரும் இணைந்து செயல்பட்டு அறிவைப் பகிர்ந்துகொள்ளும்போதுதான் சிறந்த விளையாட்டு கட்டமைப்பு உருவாகும்.
நவீன பயிற்சி முறைகள் இன்று பெருமளவில் மாறியுள்ளன. அது மைதானப் பயிற்சிகளுக்கு மட்டும்ட்பட்டது அல்ல. விளையாட்டு அறிவியல் (Sports science) வீரர்கள் தங்களைச் சிறப்பாகத் தயார்படுத்திக் கொள்ளவும், காயங்களில் இருந்து விரைவாக மீளவும், தொடர்ந்து சிறப்பாக விளையாடவும் உதவுகிறது. காயங்களில் இருந்து குணமடைவதும், உடற்தகுதியைப் பேணுவதும் மிக முக்கியம், இது வீரர்கள் தடையின்றிப் பயிற்சி பெறவும், நீண்ட காலத்திற்குத் தங்கள் திறனைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும்.
ஹாக்கியில், வலுவான கட்டமைப்பின் பலனை நாங்கள் நேரடியாகப் பார்த்திருக்கிறோம். ஆடவர் ஹாக்கியில் இந்தியா தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது பல ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த பரிசு. 'ஹாக்கி இந்தியா தேசிய சாம்பியன்ஷிப்' போன்ற போட்டிகள் தேசிய அணிக்குத் தொடர்ந்து புதிய திறமைகளை வழங்குகின்றன. இளம் வீரர்களுக்குச் சரியான வாய்ப்பும், வளரக்கூடிய பாதையும் அமைத்துக் கொடுத்தால், சர்வதேச அளவில் பெரிய வெற்றிகளைப் பெற முடியும் என்பதற்கு இதுவே சான்று.
இந்தியாவில் தகுதியான விளையாட்டு வீரர்களுக்குப் பஞ்சமில்லை. இப்போது நமக்குத் தேவை, அவர்களுக்குச் சரியான வசதிகளையும் கட்டமைப்பையும் உருவாக்குவதுதான். இதன் மூலம் எண்ணற்ற இளம் வீரர்கள் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும். ஆர்வமுள்ள ஒவ்வொரு வீரருக்கும் முறையான வழிகாட்டுதல், நல்வாய்ப்புகள் மற்றும் முன்னேறுவதற்கான தெளிவான பாதை கிடைத்தால், இந்திய விளையாட்டுத் துறை வரும் ஆண்டுகளில் புதிய உச்சங்களைத் தொடும் என்பதில் சந்தேகமில்லை. என்று அவர் கூறியுள்ளார்.