இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி.. மகளிர் ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது
இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி.. மகளிர் ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த குரூப் 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகள் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. ஷபாலி 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 57 பந்துகளில் சதம் விளாசினார். அபாரமாக ஆடிய இவர், 14 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. நேர்த்தியாக பந்துவீசிய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். முடிவில் ஹாங்காங் அணி 56 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, அடுத்து குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.
இந்தப் போட்டியில் தனது 18வது சதத்தை பதிவு செய்த மந்தனா, மெக் லானிங், லாரா வோல்வார்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச அளவில் அதிக சதம் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்தார். மேலும், மிதாலி ராஜின் 10,868 ரன்கள் சாதனையை தகர்த்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனையாகவும் மாறினார். அத்துடன், மகளிர் டி20 ஆசிய கோப்பையில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும், தொடரில் சமாரி அட்டபட்டுவின் 548 ரன்கள் சாதனையை முறியடித்து அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையையும் மந்தனா ஒரே போட்டியில் தன்வசமாக்கினார்.