இந்தியாவை தலைநிமிர வைத்த நீரு தண்டா.. துப்பாக்கி சுடுதலில் ஆசிய சாதனையுடன் தங்கம் வென்று சாதனை
இந்தியாவை தலைநிமிர வைத்த நீரு தண்டா.. துப்பாக்கி சுடுதலில் ஆசிய சாதனையுடன் தங்கம் வென்று சாதனை
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதலில் மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த நீரு தண்டா, மகளிர் டிராப் இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே இலக்குகளை குறிதவறாமல் சுட்டு ஆதிக்கம் செலுத்தினார். கடும் மழை பெய்த போதிலும், சிறிதும் பதற்றமின்றி அபாரமாக செயல்பட்ட அவர், இறுதிச் சுற்றில் 28 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதற்கு முன் இந்த பிரிவில் லியு வான்-யு என்பவர் 24 புள்ளிகள் எடுத்ததே ஆசிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சுக்குநூறாக உடைத்தெறிந்து நீரு தண்டா புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.
மழையிலும் அசைக்க முடியாத குறி இறுதி சுற்றில் சீன வீராங்கனை சன் யுனாங் கடும் சவால் அளித்தார். 25 வாய்ப்புகளில் நீரு தண்டா 23 புள்ளிகளும், சீன வீராங்கனை 21 புள்ளிகளும் பெற்று களத்தில் நின்றனர். தங்கத்தை தீர்மானிக்கும் கடைசி 5 ஷாட்களையும் நீரு தண்டா மிகத்துல்லியமாக 5-க்கு 5 என இலக்குகளை தகர்த்து தங்கத்தை உறுதி செய்தார்.
இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 5வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக காலையில் நடைபெற்ற மகளிர் டிராப் அணிகள் பிரிவிலும் நீரு தண்டா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.