இந்தியாவில் Old monk, McDowell's மதுபானங்களுக்கு தடை?
இந்தியாவில் Old monk, McDowell's மதுபானங்களுக்கு தடை? - FSSAI அதிரடி!
மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், ஓல்ட் மாங்க் (Old Monk), மெக்டவெல்ஸ் (McDowell's), ராயல் சேலஞ்ச் (Royal Challenge) உள்ளிட்ட பல பிரபல ரம் மற்றும் விஸ்கி வகைகளின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது.
உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, மதுபானங்களில் அனுமதிக்கப்படாத அல்லது தவறாக பயன்படுத்தப்பட்ட வெளிப்புற சுவையூட்டிகள் (Flavours) சேர்க்கப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
FSSAI வெளியிட்ட விளக்கத்தில், சில உற்பத்தியாளர்கள் மதுபானத்தின் இயல்பான மணம் மற்றும் சுவையைப் போல தோற்றமளிக்க வெளிப்புற சுவையூட்டிகளை பயன்படுத்தி, அவற்றை தரமான தயாரிப்பாக விற்பனை செய்து நுகர்வோர்களை தவறாக வழிநடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல நிறுவனங்களின் ரம் மற்றும் விஸ்கி மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனையில், சில தயாரிப்புகளில் செயற்கை அல்லது இயற்கை போன்ற (Nature-identical) சுவையூட்டிகள் விதிமுறைகளுக்கு முரணாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்ததால், அவை தரநிலைக்கு உட்படாதவை என வகைப்படுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட முக்கிய பிராண்டுகள்:• Mohan Rocky Springwater (Khopoli) – Old Monk The Legend Rum, Old Monk Gold Reserve Rum, Old Monk XXX Matured Rum • United Spirits (Baramati) – McDowell's No.1 Rum • INBREW Beverages (Madhya Pradesh) – Bagpiper Deluxe Whisky, Old Cask Deluxe XXX Rum • Associated Alcohol & Breweries (Madhya Pradesh) – Central Province Whisky, McDowell's No.1 Celebration Matured XXX Rum • United Spirits (Madhya Pradesh) – Antiquity Blue Whisky, Royal Challenge Whisky
மேலும், Old Monk XXX Rum-இன் ஒரு வகையில் இடம்பெற்றிருந்த "7 Years Old Blended" என்ற குறிப்பும் தவறாக வழிநடத்துவதாக FSSAI தெரிவித்துள்ளது. அந்த தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முதிர்ச்சியடையாத (Unaged) ஸ்பிரிட்டே பெரும்பங்கு வகிப்பதாகவும், 7 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த ரம் மிகக் குறைந்த அளவிலேயே (5 சதவீதத்திற்கும் குறைவாக) இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மது கலவைகளில் குறிப்பிடப்படும் வயது (Age Claim) என்பது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மிக இளம் ஸ்பிரிட்டின் வயதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற 2018 ஆம் ஆண்டின் FSS (Alcoholic Beverages) விதிமுறையை இது மீறுவதாகவும் FSSAI சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையால் நாட்டின் முன்னணி மதுபான பிராண்டுகள் சில கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், மதுபானத் துறையிலும் நுகர்வோர்களிடையிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.