📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 05:03 PM

இந்தியாவின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உதவியுடன் இரவில் சூரிய ஒளியை விற்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

இந்தியாவின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உதவியுடன் இரவில் சூரிய ஒளியை விற்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

இந்தியாவின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உதவியுடன் இரவில் சூரிய ஒளியை விற்க அமெரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்திய விண்வெளி நிறுவனம்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்திய தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்'. இந்த நிறுவனம் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) முன்னாள் விஞ்ஞானிகளால் நடத்தப்படுகிறது. இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 என்ற ராக்கெட் மூலம் செயற்கைகோள் விண்வெளியில் ஏவப்பட்டது.

தற்போது கலிபோர்னியாவை சேர்ந்த ரிப்ளெக்ட் ஆர்பிட்டல் நிறுவனம், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் விக்ரம் ராக்கெட்டுகள் மூலம் 2 செயற்கைகோள் ஏவுதல்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி விக்ரம்-1 ராக்கெட்டும், 2-வது ஏவுதலுக்கு ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கி வரும் விக்ரம்-1யு ராக்கெட்டும் பயன்படுத்தப்படும்.

பிரதிபலிக்கும் கண்ணாடி

இந்த நிறுவனம் 5 கி.மீ. பரப்பளவில், தேவைக்கேற்ப சூரிய ஒளியை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சூரிய ஒளியை எப்போது வேண்டுமானாலும் அணைத்து விடலாம், பிரகாசத்தை தேவைக்கேற்ப சரிசெய்து கொள்ள முடியும்.

இதுகுறித்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி பவன் சந்தனா வெளியிட்ட சமூகவலைதள பதிவில், “விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான மிகவும் புதுமையான வழிகளில் ஒன்றில் முன்னோடியாக இருக்கும் ரிப்ளெக்ட் ஆர்பிட்டலுடன் கூட்டு சேர்வதில் மகிழ்ச்சி. ராக்கெட்டுகள் மூலம் தேவைக்கேற்ப சூரிய ஒளியை வழங்கும் அவர்களின் தொலைநோக்கு பார்வையை ஏவுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.

கடிகார நேரத்தை பாதிக்கும்

ஆனால் இத்தகைய திட்டத்துக்கு பல சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இரவில் பிரகாசமான ஒளிக்கற்றைகள் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கலாம். வானியல் ஆய்வுகளில் குறுக்கிடலாம் மற்றும் மனிதர்கள் பிற உயிரினங்களின் உடலுக்குள் இயங்கும் இயற்கையான 24 மணி நேர உயிரியல் கடிகார நேரத்தை பாதிக்கலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

1993-ம் ஆண்டு ரஷிய விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் 65 அடி உயரமுள்ள ஒரு கண்ணாடியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, பூமியின் மீது ஒரு சுழலும் சூரிய ஒளிக்கற்றையை அனுப்பினர். ஸ்னாம்யா என்று பெயரிடப்பட்ட அந்த சோதனை வெற்றிகரமாக இருந்தபோதிலும், நிதி பற்றாக்குறையால் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.