இந்தியாவுக்கு 11வது தங்கம்.! வில்வித்தையில் 10 முறை ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய மகளிர் அணி!
நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வருகின்ற அக்டோபர் 4-ம் தேதியுடன் இந்தப் போட்டிகள் முடிவடைய உள்ள சூழலில் இன்று காலை இந்திய மகளிர் வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதன்மூலம் இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் வெல்லும் 11 வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இறுதிப் போட்டியில் 10 முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தென் கொரியாவை வீழ்த்தி, இந்திய மகளிர் ரீகர்வ் வில்வித்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
இந்திய மகளிர் அணியில் அங்கிதா பகத், கீர்த்தி சர்மா மற்றும் கும்கும் மோஹோத் ஆகிய மூவரும் ரீகர்வ் வில்வித்தைப் போட்டியில் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள், அரையிறுதிப் போட்டியில் 5-1 என்ற புள்ளிக் கணக்கில் பலம் வாய்ந்த சீனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன்மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா.
பலம் வாய்ந்த தென் கொரியா அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டு விளையாடுவது அவ்வளவு சாதரண விஷயம் அல்ல. ஏனெனில் கடந்த 10 ஒலிம்பிக் போட்டிகளில் ரீகர்வ் வில்வித்தையில் தென்கொரியா தான் சாம்பியன். அப்படி இருக்கையில் தென் கொரியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
குறைந்தபட்சம் வெள்ளி உறுதி என்ற நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் தங்கத்தையே வென்று விட்டனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் மகளிர் ரீகர்வ் வில்வித்தைப் பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை எதிர்த்துப் போட்டியிட்ட தென் கொரிய மகளிர் அணியினர், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக 10 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதுமட்டுமின்றி உலகளவில் வில்வித்தைப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் பலம் வாய்ந்த அசைக்க முடியாத அணியாகும்.
இந்நிலையில் தென்கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியப் பெண்கள் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர். தங்கம் வென்ற அங்கிதா பகத், கீர்த்தி சர்மா மற்றும் கும்கும் மோஹோத் ஆகியோருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
20வது ஆசிய விளையாட்டுகள் போட்டித் தொடரில் இந்தியா 11 தங்கம், 23 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 67 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் உள்ளது.
இந்தப் பதக்கப் பட்டியலில் 288 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 217 பதக்கங்களுடன் ஜப்பான் 2-ம் இடத்திலும், 113 பதக்கங்களுடன் தென்கொரியா 3-ம் இடத்திலும் உள்ளன.