இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விசிக பங்கேற்கும்; திருமாவளவன்
திண்டிவனம்:இண்டி கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என்று அக்கட்சியின தலைவர் திருமாவளவன் கூறினார்.
திண்டிவனம் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த பின் அவர் அளித்த பேட்டி;
எதிர்பாராத வகையில் இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழலை தமிழக மக்கள் உருவாக்கி தந்தனர். விசிகவின் நீண்ட கால கனவு, நனவாகும் வகையிலே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமைந்திருக்கிறது. வாக்காளர்களுக்கு நன்றி.
தவெக தனிபெரும் கட்சியாக ஆட்சியமைக்க முடியாத நேரத்தில், அதிமுக பாஜ ஆதரவை பெற முயற்சிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின ஆதரவை பெற முயற்சிக்காமல் காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட மதசார்பற்ற சக்திகளின் ஆதரவை பெற்றது.
தொடக்கத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம் என்றாலும் கூட, விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று தவெக வலியுறுத்தியது. எனவே எங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து அமைச்சரவையில் இடம்பெறுவது என முடிவு செய்தோம். வரலாற்றுக் கட்டாயமாக எமக்கு கிடைத்திருக்கிற நல்வாய்ப்பு.
எளிய மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் அமைச்சரவையில் விசிக இணைந்தது. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தாலும் கூட்டணியில் இடம்பெறுவது பற்றி இதுவரை விவாதிக்கவில்லை. கூட்டணி நிலைப்பாட்டை நாங்கள் இன்னமும் எடுக்கவில்லை.
சமூகநீதி முற்போக்குக் கூட்டணி என்பது பற்றி யாரும் எங்களிடம் பேசவில்லை. இந்த விஷயத்தில் இடதுசாரிகளின் கருத்து சரியானது தான். இண்டி கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும். இந்த கூட்டணி சிதறி விடக்கூடாது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.