இடைத் தேர்தலா...? எடைத் தேர்தலா...?
இடைத் தேர்தலா...? எடைத் தேர்தலா...?
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழு தொகுதிகள் காலியாக உள்ளபோதும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.ஏன் இந்தத் தேர்தல்?
சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தவெக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை விட்டு விலகி தவெகவில் இணைந்தனர். இதன் விளைவாகவே இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய முதன்மையான எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆளுங்கட்சியான தவெக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இதே தொகுதிகளில் வெற்றி பெற்று ராஜினாமா செய்தவர்களையே மீண்டும் வேட்பாளர்களாகக் களத்தில் இறக்கியுள்ளது.
கடந்த தேர்தல் முடிவுகள்
மதுராந்தகம் தொகுதி
தாராபுரம் தொகுதி
இந்த முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அதிகமான செல்வாக்கு இருப்பது தெளிவாகிறது. தமிழ்நாடு முழுவதும் இளைய சமுதாயத்தினரும் திமுகவை விரும்பாதவர்களும் பேரலையாய்த் தவெகவுக்கு வாக்களித்தபோதும், இந்த இரு தொகுதிகளிலும் தவெக வெற்றிபெற இயலவில்லை.
தற்போதைய இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
தவெகவுக்குக் கடும் எதிர்ப்பு
வாக்களித்தப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மதிப்பளிக்கும் எந்த நியாயமான காரணமும் இல்லாமல் பதவியை விட்டு விலகியதோடு, உடனடியாக ஆளுங்கட்சியில் போய்ச் சேர்ந்தது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சுயநல நடவடிக்கையாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பதவி விலகியவர்களையே மீண்டும் வேட்பாளர்களாகக் களமிறக்கியது தவெகவுக்கு மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது. தேர்தல் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் தவெக வேட்பாளர்கள் மக்களால் விரட்டப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே, இந்த இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லலாம்.
அதிமுகவா? திமுகவா?
மதுராந்தகம் அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் தொகுதி. அதிமுகவுக்கு அதிகமான வாக்கு வங்கி உள்ளது. எனவே, திமுகவுக்கு அதிமுக கடும் சவாலாகவே இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தவெக கூட்டணி
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி
கடந்த நான்கு மாத தவெக ஆட்சியின் மீது தமிழ்நாடு முழுவதும் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. மாற்றம் வரப்போகிறது என்று நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி முழுமையாகச் செய்யப்படாததால் விவசாயிகள் வெறுப்படைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கடும் மின்வெட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மைப் பணியாளர் போராட்டத்திற்குத் தேர்தலுக்கு முன் ஆதரவளித்த முதல்வர், ஆட்சிக்கு வந்ததும் அவர்களைக் கைவிட்டுவிட்டார். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் குடமுழுக்குக் குழப்பங்கள் அரசு மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மாநில அளவில் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இவையெல்லாம் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும்.
இடைத்தேர்தலா..! எடைத்தேர்தலா..!
தவெக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பதவியை ராஜினாமா செய்ய வைத்து, தவெக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்வது என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. தவெக இந்த இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தால் தவெக அரசு தொடர்வது கேள்விக்குறியாக மாறிவிடும்.
தவெகவின் ஒரே ஒரு வெற்றியைப் பார்த்து மாலையிட்டுக் கொண்ட இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், மதிமுக முதலிய கட்சிகள் தவெக அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பார்களா என்பது கேள்விக்குறியாகி விடும். மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக பக்கம் தாவி வரத் தயங்குவார்கள். இந்த இடைத்தேர்தல் தவெகவுக்கு அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்தை எடைபோடும் தேர்தலாகும்.
திராவிட இயக்கம் வீழ்த்தப்பட்டு விட்டது, அறுபது ஆண்டுகால அரசியல் வரலாறு மாறிவிட்டது என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்களும், இன்ஸ்டாகிராம் கனவுக்க குழந்தைகளான ஜென்சிகளும் (Gen Z) தவெக தோல்வியடைந்தால் அதிர்ச்சியடைவார்கள்.
நூற்றாண்டைக் கண்ட திராவிட, சமூகநீதி, தமிழ் மற்றும் மாநில உரிமைகள் தளத்தில், வரலாற்றுப் படிகளில் பயணிக்கும் திமுக - அதிமுக உள்ளிட்ட பாரம்பரிய அரசியலின் எதிர்காலத்தை இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலமே எடைபோட முடியும்.
- வழக்கறிஞர் தமிழகன், திருச்சிராப்பள்ளி
View all articles by தமிழகன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.