இடைத்தேர்தலை நோக்கி நகரும் த.வெ.க
இடைத்தேர்தலை நோக்கி நகரும் த.வெ.க - கூட்டணிக் கட்சிகளை ஓரம் கட்டுகிறாரா விஜய்? | Exclusive
காங்கிரஸ்–விஜய் இடையிலான பிரதமர் வேட்பாளர் விவகாரம், இடதுசாரிகளின் விமர்சனங்கள் உள்ளிட்ட கருத்து வேறுபாடுகள், 2029 தேர்தலுக்கு முன் கூட்டணியை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதே முக்கியக் கேள்வி!
அதன்பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கூட்டணிக்குள் வந்தன. ஆனால், சிபிஐ, சிபிஎம் மட்டும் ஆட்சிக்குள் வராமல் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுத்தன. இதுதான் விஜய் அரசுக்கு இப்போது ஒரு சிக்கலாக மாறியிருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுக்குள் வந்திருந்தால், அவை ஓர் அரசியல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சூழல் இருந்திருக்கும். ஆனால், வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதால் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிக்கும் சுதந்திரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, விவசாயிகள், கடன் பிரச்னைகள், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள், காவல் மரணங்கள், ஆணவக் கொலைகள் உள்ளிட்ட பல பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து தனித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.
அடுத்ததாக, இடதுசாரி மாணவர் அமைப்புகளும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இடதுசாரி கட்சிகளுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.பி.எம்., சி.பி.ஐ கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டார். வேறு எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை.
இது இடதுசாரி கட்சியினரை அதிருப்தியடையச் செய்தது. மேலும், இடதுசாரி மாணவர்களுக்கு எதிராகக் கல்லூரி முதல்வர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதன் பின்னணியில் தலைமைச்செயலாளர் சாய்க்குமார் இருப்பதாக சி.பி.எம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டினார். தலைமைச்செயலாளரை மாற்ற வேண்டும் என்று சி.பி.எம் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தங்கள் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியில் தங்களுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்ற கோபம் இடதுசாரிகளிடம் வெளிப்பட்டது. எங்கள் ஆதரவை வைத்து ஆட்சி நடத்தப்போகிறீர்களா? அல்லது, அதிகாரிகளை வைத்து ஆட்சியை நடத்தப்போகிறீர்களா என்று பெ.சண்முகம் கோபத்துடன் கேள்வி எழுப்பினார். இந்தப் பிரச்னையால், ஒரு வித்தியாசமான அரசியல் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.
சிபிஐ, சிபிஎம் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் கூட்டணியில் முழுமையாக இணைவதில்லை. அதே நேரத்தில் அரசின் செயல்பாடுகள் பிடிக்காதபோது வெளிப்படையாக விமர்சிக்கின்றன. இதற்குத் தீர்வாக ஓர் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக அமர்ந்து அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த யோசனை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே அவர்களின் அதிருப்திக்கு இன்னொரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, முதல்வர் விஜய்யை வைத்து தென்னிந்தியாவில் பெரியளவிலான பிரசாரத்தை முன்னெடுக்கலாம் என்ற கணக்கு இருக்கிறது. இந்த நிலையில், விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்ற பிரசாரத்தைத் தொடங்கியிருப்பது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், விஜய், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு காங்கிரஸுடன் நெருக்கம் ஆவதற்கு விரும்பவில்லை என்று தெரிகிறது.
அதற்கு முக்கிய காரணம் பாஜகவுடனான உறவு குறித்த கணக்கு. த.வெ.க-வைப் பொறுத்தளவில், காங்கிரஸையும் அது முழுமையாக நம்பவில்லை, பாஜகவையும் அது நெருங்கவில்லை. விஜய்யின் அரசியல் கணக்கு மிகவும் கவனமாக நகர்த்தப்படுவதாகவே தெரிகிறது.
காங்கிரஸுடன் அதிக நெருக்கம் காட்டினால் பாஜகவின் கவனம் தன் அரசின் மீது அதிகரிக்கலாம். மறுபுறம் பாஜகவுடன் நெருக்கமாகச் சென்றால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு உருவாகலாம். அதனால் இரு தரப்பிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை விஜய் பராமரிக்க விரும்புவதாக அவரது அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய்யின் ஆரம்ப நிலைப்பாட்டுக்கும், அமித் ஷா தமிழகம் வந்திருந்தபோது விஜய் வெளிப்படுத்திய கருத்துகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன. அது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. அமித் ஷாவை சந்தித்த பிறகு இந்த விவகாரத்தில் விஜய்யின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலிருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் அணிக்கு வரலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன. ஏற்கனவே கட்சி மாறியவர்கள், ஆதரவு அளிப்பவர்கள் சேர்ந்து எண்ணிக்கை அதிகரித்தால், இடைத்தேர்தல்களில் கணிசமான தொகுதிகளை வென்று சட்டப்பேரவையில் விஜய்யின் பலத்தை 120-க்கு அருகில் கொண்டு செல்ல முடியும் என்ற கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்காகவே மக்கள் மத்தியில் உடனடி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணம், பொங்கல் நலத்திட்டங்கள், எரிவாயு சிலிண்டர் தொடர்பான அறிவிப்புகள், திருமண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மூலம் இடைத்தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சி நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
கூட்டணிக் கட்சிகளின் தயவில் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, தனக்கான பெரும்பான்மையை உருவாக்க வேண்டும் என்பதுதான் இப்போது விஜய்யின் அரசியல் முன்னுரிமையாக இருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் கூட்டணி உடையுமா என்று கேட்டால், உடனடியாக கூட்டணி உடையும் என்று சொல்ல முடியாது என்பதுதான் பதில்.
இப்போதைக்கு எல்லா தரப்பினரும் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள். மோதலைத் தவிர்த்து, காலத்தைத் தள்ளிச் செல்ல வேண்டும் என்பதுதான் அனைவரின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தலில் விஜய் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்று, தனக்கான பெரும்பான்மையை உருவாக்கத் தொடங்கினால், கூட்டணிக் கட்சிகளின் அரசியல் முக்கியத்துவம் குறையலாம். அந்த நேரத்தில்தான் உண்மையான மோதல் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
காங்கிரஸ் – விஜய் இடையிலான பிரதமர் வேட்பாளர் விவகாரம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் விமர்சனங்கள், ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதில் இழுபறி, பாஜகவுடனான விஜய்யின் எச்சரிக்கையான அணுகுமுறை எனப் பல விஷயங்கள் ஏற்கனவே கூட்டணிக்குள் சிறு விரிசல்களை உருவாக்கியிருக்கும் நிலையில், இவை அனைத்தும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எந்த வடிவத்தை எடுக்கப் போகிறது என்பதுதான் அடுத்த பெரிய கேள்வி.
இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தால் இந்த கணக்கு வேகம் பெறும். அப்போது, "கூட்டணிக் கட்சிகளை விஜய் ஓரம் கட்டுவாரா?" என்ற கேள்வி வெறும் அரசியல் விவாதமாக இல்லாமல், தமிழக அரசியலின் அடுத்த பெரிய திருப்பமாகவே மாறக்கூடும்.
இடதுசாரிகள் தரப்பிலிருந்து எழும் கேள்விகளின் பட்டியலில் இன்னொரு விஷயமும் சேர்ந்திருக்கிறது. அதாவது, "ஊழல் புகார்கள் தொடர்பான கோப்புகள் என் மேசையில் இருக்கின்றன" என்று விஜய் கூறிய கருத்து, எதிர்க்கட்சிகளை மிரட்டும் தொனியில் இருப்பதாக சிபிஎம் தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது.
இடைத்தேர்தலில் விஜய்யின் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றால், சட்டப்பேரவையில் தனக்கான பெரும்பான்மையை உருவாக்கும் முயற்சி வேகமெடுக்கும். அந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளையும், கூட்டணிக் கட்சிகளையும் விஜய் அணுகும் விதமும் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை, இடைத்தேர்தல் முடிவுகள் விஜய்க்குச் சாதகமாக அமையவில்லை என்றால், தற்போதுள்ள கூட்டணி கணக்கையே அவர் தொடர்ந்து சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகலாம். எனவே, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாடு அரசியல் எந்த கூட்டணிக் கணக்கில் நகரப் போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போவது இப்போதைய பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல… வரப்போகும் இடைத்தேர்தல் முடிவுகள்தான்.